குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்ட பயிற்சி முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 சதவீதம் டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 703 ரேஷன் கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு குழுவினர் அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். 10 இடங்களுக்கு ஒரு மண்டல குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரேஷன் கடைகளுக்கு ஏற்றவாறு முகாம்களின் எண்ணிக்கை மாறுபடும். 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஏற்றவாறு முகாம்கள் அமைக்கப்படும்." என்று கூறினார்.
ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களில் உள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உள்ளவர்கள் என்று குறிப்பிடப்பட்ட நிலையில், வாடகை வீட்டில் இருப்போர் எதன் அடிப்படையில் பெற முடியும் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலத்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "தற்போது அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கும் நேரம். தேவையற்றதை கூறி குழப்பி கொள்ள வேண்டாம்.
விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் நுகர்வு அட்டை, வங்க கணக்கு அட்டை ஆகியவற்றை தான் கொண்டுவர சொல்லியிருக்கிறோம். வங்க கணக்கு இல்லையென்றால் முகாம் நடக்கும் இடத்தில் ஏற்பாடு செய்து தரப்படும். மற்றவை தேவையென்றால் அதிகாரிகள் கேட்பார்கள் அதை சமர்பிக்கலாம். மின் நுகர்வு அட்டை அவசியமான ஒன்று இல்லை. ஆனால், அதிகாரிகள் கேட்கும் போது கொண்டு செல்ல வேண்டும்." என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil