/tamil-ie/media/media_files/uploads/2023/08/magalir-urimai-form-1.jpg)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பதிவு செய்துள்ள விண்ணப்பங்களில் பாதிக்கு பாதி அதாவது சுமார் 1 கோடி பேர் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்க கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி தொடங்க உள்ளது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்காக தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 1 கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் 2 கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்த பிறகு, செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் மாதம் 1000 கோடி ரூபாய் என்ற அளவில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதி வாய்ந்த 1 கோடி பயனாளிகளை சேர்க்கும் பணி என்பது மிகவும் சவாலானது. இந்தப் பணியில் தலைமைச் செயலாளர் முதல் பல்வேறு துறை அதிகாரிகளும், அலுவலர்களும், அரசு ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத் தலைவிகளிடம் இருந்து ஜூலை 24-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த பணியில், ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற்ற முதல் கட்ட சிறப்பு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட முகாம் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தற்போது வரை 59.86 லட்சம் விண்ணப்பட்டங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த இரு முகாம்களிலும் விடுபட்டவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சுமார் 2 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு கோடி பேர் மட்டும் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளதால் பாதிக்கும் மேலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பெறுவதற்கான நெறிமுறைகள் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியானதா என்பதை சரிபார்க்க அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளிகளைக் கண்டறியும் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பொருட்டு தேவையேற்பட்டால் மட்டுமே கள ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வில் தேர்வாகிறவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதை உறுதிபடுத்தும் வகையில் அவர்கள் அளித்துள்ள மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.