தமிழ்நாடு அரசு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இரண்டு முக்கிய திட்டங்களின் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான தகுதியில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்:
அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவை உறுதி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. 2024-25 கல்வியாண்டில் கிராமப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.
பள்ளிகள் தூரத்தில் இருப்பதாலும், சில குடும்பங்களின் சூழல் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவின்றி பள்ளிக்குச் செல்வதில்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்தது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் தொலைதூரக் கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் ஜூலை 15 முதல் விரிவாக்கம்; புதிய தகுதிகள் அறிவிப்பு:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் ஜூலை 15 முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் வரை இதற்கான முகாம்கள் நடைபெறும்.
இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விதிகள் மற்றும் விஷயங்கள் குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட விதிகளின் மூலம், யாருக்கெல்லாம் பணம் கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.
யாரெல்லாம் உரிமைத்தொகை பெற தகுதியற்றவர்கள்?
அரசு ஊழியர்கள்.
நேரடியாக அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிப் பணிகளில் (உதாரணம்: சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்) இருப்பவர்கள்.
குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சிப் பணிகளில் இருப்பவர்கள்.
யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள்?
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத்திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பங்களில் உள்ளவர்கள், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19,487 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கூடுதல் விலக்குகள்:
மாநிலம் முழுவதும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் நடத்துவது குறித்து ஜூன் 19, 2025 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேலும் பெண்கள் பயனடைய ஏதுவாக, ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் மேலும் சில விதிவிலக்குகள் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி, அரசு பின்வரும் கூடுதல் விதிவிலக்குகளை வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளது:
பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale) பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
அரசுத் திட்டங்களின் கீழ் மானியம் பெற்று, அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இந்த இரண்டு அறிவிப்புகளும் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.