தர்மபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான டாப் ஸ்லிப் யானை குத்தி வனப் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி அன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து கோவையை நோக்கிச் சென்றது.
அங்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்துள்ள மானாம் பள்ளியில் உள்ள மந்திரி மட்டம் பகுதியில் விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ரேடியோ காலர் கருவி பழுதாகி செயலிழந்து உள்ளதால் யானை நகர்ந்து செல்லும் இடத்தை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் மக்னா யானை மீண்டும் இரண்டாவது முறையாக வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சி சரளபதி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து சுற்றி வந்தது. விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை குடியிருப்புக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானையை கண்காணித்து வந்தனர்.
ஆனால் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ரோந்து பணியில் இருந்த வனத்துறை வாகனத்தை மக்னா யானை தாக்கியதில் வாகனம் தலைக் குப்பற கவிர்ந்தது. வனத்துறையினர் 6 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. வனவர் மெய்யப்பன் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து டாப் ஸ்லிப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கும்கி யானைகளான சின்னத்தம்பி, ராஜவரதனன் மற்றும் முத்து என மூன்று கும்கி யானைகளை வைத்து மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து யானை எப்போது வேண்டுமானாலும் பயிர்களை சேதப்படுத்தி விடுமோ என்று விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் சரளபதி, தம்பம்பதி வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் யானை புகுந்து விடுமோ என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இந்த யானையை வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் யானையை பிடித்து கரோலில் அடைக்க வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு வன எல்லைப் பகுதியில் கும்கி யானைகள் உதவிகளுடன் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மக்னா யானையின்
நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குடியிருப்புக்குள் வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை