தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி அந்த மக்னா யானை கும்கி யானை உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, 6 ஆம் தேதி கோவை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது.
நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சியில் இருந்து கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு மேல் பல்வேறு பகுதிகளில் சுற்றி நேற்று கோவை பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரை பகுதிக்கு வந்தது. பின்னர் மதுக்கரையிலிருந்து குனியமுத்தூர் பிகே புதூர் பகுதியில் காலை முதல் இரவு வரை ஒரே பகுதியில் நின்றது.
தொடர்ந்து நேற்று இரவு பிகே புதூர் பகுதியில் இருந்து இடையர்பாளையம் பகுதிக்கு சென்றது. இரவு தோட்டத்தில் உள்ள வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
நேற்று இரவு 3 மணி வரை வனத்துறையினரின் கண் பார்வையில் இருந்த யானை மூன்று மணிக்கு மேல் வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்து விலகியது.
இன்று காலை 6:00 மணி அளவில் மீண்டும் செல்வபுரம், புட்டு விக்கி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் வந்தது.

தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் புட்டு விக்கி பகுதியில் இருந்து நகரின் முக்கிய பகுதியான செல்வபுரம் பகுதி வரை சென்று தெலுங்குபாளையம் வந்து பின்னர் பேரூர் வந்தடைந்துள்ளது.
பேரூர் எஸ்எம்எஸ் கல்லூரி அருகே தற்போது வந்துள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த பகுதியில் வைத்து யானையை ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் யானை நகர்ப்பகுதியில் சென்றால் ஆபத்தான சூழல் நிலவும் என்பதால், தற்போது பேரூர் எஸ்எம்எஸ் கல்லூரி அருகே சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

கும்கி யானை வந்தவுடன் ஊசி செலுத்தி பிடிக்க கோவை மண்டல வன பாதுகாவலர் ராம சுப்பிரமணியம் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் 2 கும்கி யானைகள் தேவைப்பட்டால் அழைத்துக் வரப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“