scorecardresearch

கோவை மதுக்கரையில் தஞ்சம் அடைந்த மக்னா யானை.. ட்ரோன் மூலம் கண்காணிப்பு.. அடுத்து என்ன?

யானையின் நடமாட்டத்தை ட்ரோன் கேமிரா மூலம் வனத் துறையினர் கண்காணித்தனர். இரவு நேரத்தில் யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவது வழக்கமான நிகழ்வு என்பதால் யானையை துரத்த நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளனர்.

Magna elephant sheltered in Madhukarai Coimbatore
மதுக்கரையில் தஞ்சம் புகுந்த மக்னா யானையை படத்தில் காணலாம்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் இந்த மக்னா யானையை பிடிக்க கோரி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி அந்த மக்னா யானை கும்கி யானை உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, 6ஆம் தேதி கோவை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாள்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது.
பின்னர் கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வந்தது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சாலையை கடந்த யானை, இன்று காலை மதுக்கரை வனப்பகுதியை நோக்கி நேற்று முதல் நகர்ந்து இன்று மதுக்கரை வந்தது.
தென்னை தோப்பு, ஓடை மற்றும் விளை நிலங்கள் வழியாக சென்ற மக்னா யானை காலையில் கோவை மதுக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது.

மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள தடுப்பு சுவர்களை உடைத்து நாசப்படுத்தியது.இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த மக்னா யானை மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளி நகர், பி கே புதூர் வழியாக தற்போது செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள முற்புதரில் தஞ்சம் அடைந்துள்ளது.

காலை 9 மணியிலிருந்து செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள முள்புதர் மண்டிய பள்ளத்தில் நின்று கொண்டிருந்த மக்னா யானை சுமார் 5 மணி நேரம் கழித்து வெளியே வந்தது.
வனத்துறை மற்றும் பொதுமக்களின் கூட்டத்தை கண்டதும் மீண்டும் முள்வேலி பகுதியில் நுழைந்தது.

முள்வேலி பகுதியில் நுழைந்த யானையின் பாதையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். எனினும், நீண்ட நேரம் ஆகியும் யானை புதரில் இருந்து வெளியே வரவில்லை.
இதையடுத்து, வனத்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து முன்னெச்சரிக்கைக்காக ஊசிகளை தயார் செய்து வருகின்றனர். மேலும், மாலை பொழுதில் யானை வெளியே குடியிருப்பு பகுதியை நோக்கி செல்லும் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஊசி செலுத்த உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், முகாமிட்டு சுமார் 10 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில் யானை மீண்டும் நகர தொடங்கி விட்டது. அப்போது, பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வராத வண்ணம் பட்டாசுகள் வெடித்து வனத்துறையினர் விரட்டி வருகின்றனர்.

யானையின் நடமாட்டத்தை ட்ரோன் கேமிரா மூலம் வனத் துறையினர் கண்காணித்தனர். இரவு நேரத்தில் யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவது வழக்கமான நிகழ்வு என்பதால் யானையை துரத்த நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Magna elephant sheltered in madhukarai coimbatore

Best of Express