நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஏன் அடித்தேன் என்று ஒரு யூடியூப் சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நவம்பர் 3ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் தனது உதவியாளர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாவலர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு மர்ம நபர் பின்னால் வந்து தாக்குதல் நடத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி எதற்காக அந்த நபர் தாக்கினார் என்ன நடந்தது என்று ரசிகர்களும் நெட்டிசன்களும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
விஜய் சேதுபதி உதவியாளர்களுடன் விமானத்தில் வரும்போது, அந்த நபருடன் விஜய் சேதுபதி உதவியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் விமான நிலையத்தில் அந்த நபர் பின் தொடர்ந்து விரட்டி வந்து தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. அவருடைய உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும், விமான நிலைய போலீஸார் இருதரப்பையும் விசாரித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பந்தப்பட்ட நபர் நான் ஏன் அடித்தேன் என்று ஒரு யூடியூப் சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அந்த நபர் தன்னுடைய பெயர் மகா காந்தி என்றும் ஏன் தாக்கினேன் என்றும் கூறியுள்ளார். விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்துகள் சொல்லலாம் என்று அவரிடம் போனதாக தெரிவித்துள்ளார். மேலும், பேட்டி எடுக்கும் யூடியூப் ஆங்கரிடம், “தம்பி தப்பா எடுத்துக்கொள்ளக்கூடாது, நீங்கதான் விஜய் சேதுபதி, தேசிய விருது வாங்கினதுக்கு நன்றி என்று சொல்கிறேன். அதற்கு நீங்கள் பதில் என்ன சொல்வீங்க…” என்று கேட்கிறார். அதற்கு, “அந்த ஆங்கர், ரொம்ப நன்றி, தேங்ஸ் ஃபார் யுவர் விஷ்ஷிங் என்று சொல்வேன்” என்று கூறுகிறார்.
தொடர்ந்து பேசும் மகா காந்தி, நடிகர் விஜய் சேதுபதி இது ஒரு தேசமா கேட்டதாக தெரிவிக்கிறார்.
மேலும், யூடியூப் ஆங்கர், மகா காந்தியிடம், நீங்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவை வழியைப் பின்பற்றுகிறீர்கள். அந்த வார்த்தையை சொல்லித்தான் கேட்டீர்களா? அதை தெரியாமல் சொல்லிவிட்டு சென்றாரா ? என்று கேட்கிறார். அதற்கு மகா காந்தி, “குருபூஜைக்கு வந்தீங்களா என்று கேட்டேன். அதற்கு விஜய் சேதுபதி குருனா யார் என்று கேட்டார். நீ சொல்ற ஆளு ஜூவிஷ் கார்பெண்டர் என்று சொல்லிவிட்டு போகிறார்.” என்று விஜய் சேதுபதி மீது குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு பிறகு, மகா காந்தி, அவரை தமிழில் கண்டபடி திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
எப்படி இந்த விவகாரம் கைகலப்பாக முடிந்தது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மகா காந்தி, “அந்த இடத்தில் வாய்வார்த்தை வாக்குவாதமாக ஓரளவுக்கு முடிந்த விஷயம், லக்கேச் எடுத்துக்கொண்டு வெளியே நடந்து வரும்போது அவர் (விஜய் சேதுபதி) கூட ஒரு பாஸ்டர் ஜான்சன் என்று ஒருவர். இன்னொருவர் அவர் கூட இருந்தார். அவங்க 2 பேர் கை மட்டும்தான் வந்தது. நான் ஆர்டிஐ-யில், விமான நிலைத்தில் அப்போது பதிவான வீடியோ காட்சிகளை வாங்கிவிடுவேன். அவரை கேரளா, கன்னடகாரர்கள் அடித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். தமிழன் மகா காந்தி நான்தான் அடித்தேன். ஆனால், அவர்கள் என்னை அடித்ததால் அடித்தேன்” என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி உடன் இருந்தவர்கள் தன்னை அடித்ததால் தான் திரும்ப அடித்ததாக மகா காந்தி என்பவர் ஒப்புதல் வாக்குமூலமாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"