புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.
அதே போல் முன்னோர்கள் எழுதி வைத்து சென்ற புராணத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு புண்ணிய நதி உண்டு. மேஷம் – கங்கை, ரிஷபம் – நர்மதை, மிதுனம் – சரஸ்வதி,கடகம் – யமுனை, சிம்மம் – கோதாவரி, கன்னி – கிருஷ்ணா, துலாம் – காவிரி, விருச்சிகம் – தாமிரபரணி, தனுசு – சிந்து மகரம் – துங்கபத்ரா, கும்பம் – பிரம்மபுத்ரா, மீனம் – பரணீதா போன்ற நதிகளுக்கு உரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.
குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படும். சென்ற வருடம் குருபகவான் துலாம் ராசியில் பிரவேசித்தபோது, துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகள் ராசிக்கு மாறியிருகிறார்.
இதையடுத்து தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தொடக்கத்தில் இதுபற்றி விழிப்புணர்வு மக்களுக்கு போதிய அளவு இல்லை.
பின்னர் ஆன்மீக அமைப்புகளின் முயற்சியால் புஷ்கரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புஷ்கர விழாவுக்கு கடும் எதிர்பார்ப்பு உண்டானது. புஷ்கர விழாவுக்காக தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகள் சரிசெய்யப்பட்டன. குறிப்பாக பாபநாசம், அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், நெல்லை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன் தினம் தாமிபரணி ஆற்றங்கரையில் நடைப்பெற்ற மிகப்பெரிய ஆர்த்தி விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். குறிப்பாக மகா ஆர்த்தியில் பக்தர்கள் கலந்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.