மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதல் இன்று காலை வரை திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு சிவாலயங்களில் 4 ஜாமங்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அந்தவகையில், பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சி காவிரி ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன.
இரவு 10 மணிக்கு மேல் முதல் ஜாமம் பூஜையும், இரவு 1 மணிக்கு மேல் 2-ம் கால பூஜையும், 3-மணிக்கு மேல் 3-ம் ஜாம பூஜையும், அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்றன. 3-ம் கால பூஜை நிறைவில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். 4-ம் கால பூஜை அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.

முதல்கால பூஜை முடிந்த பின்பு கோயில் நவராத்திரி மண்டபத்தில் முன்னணி நடனப்பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. நேற்றிரவு 8 மணி முதல் தீட்சை பெற்ற சிவனடியார்கள் கோயில் கொடிமர மண்டபம், மூன்றாம் பிரகார மண்டப பகுதிகளில் இரவு முழுவதும் தாங்கள் கொண்டுவந்த சிவலிங்கத்திற்கு பால், தயிர், திரவியம், சந்தனம் என பூஜைப்பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடத்தி தீப ஆரத்திகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்த சிவபக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டு வழிபட்டனர்.
அதேபோல் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு தலைமையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழா நேரலையாக காண்பிக்கப்பட்டது. இதில் தியான அன்பர்களுக்கு ருத்ராட்சம் வழங்கப்பட்டது. ஈஷா தன்னார்வலர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் 600-க்கும் மேற்பட்ட சிவபக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டு விடிய விடிய ஈஷா நிகழ்ச்சிகளை நேரலையில் கண்டு களித்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் கோயிலை சுற்றியுள்ள சிவாலயங்கள், நந்திகோயில் தெரு நாகநாதசுவாமி கோயில், இ.பி.ரோடு பூலோகநாத சுவாமி கோயில், பழைய பால்பண்ணை அருகே உள்ள கைலாசநாதர் கோயில், ஓமாந்தூர் மாசி பெரியண்ணசாமி கோயில், கூத்தாப்பர் சிவன் கோயில், உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில், உய்யக்கொண்டா திருமலை உஜ்ஜீவநாத சுவாமி கோயில், உத்தமர்கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிசேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மாநகரத்திலிருந்து ஓமாந்தூர், திருநெடுங்களநாதர், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த சிவதலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தலைமையிலான போலீஸார் இரவு முழுவதும் ரோந்துப்பணியினை மேற்கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல், திருச்சி