மகாபலிபுரத்தில் மோடி- ஜீ ஜின்பிங் சந்திப்பு.. 1 மணி நேரத்தை கடந்து இருவரும் பேசியது என்ன?

ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த விவாதங்கள் நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை....

மகாபலிபுரத்தில் இரு தலைவர்களுக்கிடையில் நேற்று  நடந்த 150 நிமிட நேர்முக கலந்துரையாடலில் என்னென்ன விவாதிக்கப்பட்டன என்பதை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே  ஊடகங்களுக்கு விளக்கும் போது, “தீவிரமயமாக்கல் என்பது இரு நாடுககளையும்  கவலை அளிக்கும் விஷயமாக இருப்பதால் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும், பயங்கரவாத தன்மையில் இருந்து  தங்கள் நாடுகளில் அடிப்படையாய் இருக்கும்  பலதரப்பட்ட  கலாச்சார முறை , பன்முக சமூக அமைப்புகளை காக்கும் துணிவைப் பெற வேண்டும்”  என்ற ஒருமித்த கருத்தும் இருதலைவர்களுக்கு இடையில் புரியப்பட்டதாக தெரிவித்தார்.

ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த விவாதங்கள் நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை என்றாலும், சீனா “தீவிரமயமாக்கல்” பற்றிக்  குறிப்பிடும் போது தனது சின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கின்ற  உய்குர் இஸ்லாமியர்களை மனதில் வைத்து தான் பேசுகிறது என்பதாய் பொருளாய் கொள்ளமுடிகிறது.

 

பிரதமர் மோடி – ஜீ ஜிங்பின் சந்திப்பு

பயங்கரவாதத்தை தாண்டி, இரு நாடுகளுக்குள் இடையில்  அதிகரித்து  வரும் வர்த்தக சமமின்மை,  வர்த்தக பற்றாக்குறை, வர்த்தக அளவை அதிகரிக்க செய்யும் செயல்முறைகள், ஆக்கப்பூர்வமான முதலீடுகளை அடையாளம் காணுதல் போன்றவைகளும் விவாதிக்கப்பட்டன, என்று விஜய் கோகலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், இருதலைவர்களும் தத்தம் நாடுகள் நிறைவேற்றத் துடிக்கும் ‘தேசிய வளர்ச்சி’ மற்றும் ‘நிர்வாக முன்னுரிமைகள்’ பற்றியும் பேசியுள்ளனர். குறிப்பாக, பிரதமர் மோடி, ஜின்பிங்கிடம் பொருளாதரத்தை சீரமைப்பதற்காகவும் , மேம்படுத்துவதற்காகவும் தான் இரண்டாவது முறை இந்தியா நாட்டு மக்கள் தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கு, பதில் கூறும் விதமாக, அடுத்த நான்கரை ஆண்டுகளும்,  பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்து செயல்பாடுகளிலும்   இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று, யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக விளங்கும் , ஏழாம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட  கம்பீரமான நினைவுச்சின்னங்களை சீனா அதிபருக்கு,பிரதமர் சுற்றிக் காண்பித்து  நினைவு சின்னங்களில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களையும் விளக்கினார்.

தென்னிந்தியாவிற்கும் சீனாவின் புஜியான் மாகாணத்திற்கும் இடையிலான ஆயிரம் ஆண்டுகளான வர்த்தக தொடர்புகள் குறித்து இந்தியப் பிரதமர் பேசிமுடித்த போது , “உங்களது விருந்தோம்பல் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது” என்று சீன அதிபர் ஜின்பிங் சொன்னதாக, நேற்று செய்தியாளர்களிடம்  விஜய் கோகலே தெரிவித்திருக்கிறார். புஜியான் மாகாணத்தின் ஆளுநராக சில ஆண்டுகளுக்கு முன் ஜின்பிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுனனின் தவம் செய்யும் சிற்பக் கலையில் நின்று தங்கள் நேரங்களை கழித்துக் கொண்டிருக்கும் போது, “மனிதனும் இயற்கையும் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்கின்றன” என்ற அச்சிற்பத்தில் அமைந்துள்ள அடிப்படை சித்தாந்தத்தை மோடி, ஜின்பிங்கிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள கலை சிற்பங்களைக் குறிப்பிட்டு , சீனாவைப் போலவே இந்தியாவும் நீண்ட வரலாற்றைக் கொண்ட நாகரிகம் என்றும் மோடி கூறியுள்ளார்.

கலந்துரையாடல்களுக்குப் பிறகு, மோடி செய்துள்ள ட்வீட்ல் ,

“மாமல்லபுரம் இந்தியாவின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும். இங்கு வர்த்தகமும், ஆன்மீகமும் ஒன்றாக  இணைக்கப்பட்டுள்ளது .யுனெஸ்கோ வின் பாரம்பரிய தளமான இங்கு,  நானும்  ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் நேரத்தை செலவிடுகிறோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்று டுவீட் செய்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்   நேற்று வெளியிட்டுள்ள டுவீட்ல் , “ஒரு நீண்ட இரவு உணவில் இனிமையான உரையாடலுடன் இந்த நாள் முடிவடைகிறது” பதிவு செய்திருந்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close