கோவையில் பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற தைப்பூச சத்சங்க நிகழ்ச்சியில் பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு அடிப்படையிலேயே ஞான கல்வி அவசியம் என தெரிவித்துள்ளார்.
கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற தைப்பூச சத்சங்க நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் நிறுவனரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான மகா விஷ்ணு கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது, அறிவியல் மற்றும் ஆன்மீக சக்தியை இணைந்து பயன்படுத்தினால் மனிதர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தாம் கூறி வருவதாகவும்
பரம்பொருள் யோகா என்பது அனைத்து யோக பயிற்சிகளும் இணைந்த பயிற்சி என கூறிய அவர் இது அனைவருக்குமான தீர்வு என்று குறிப்பிட்டார்.
இளம் தலைமுறையினர் செல்லும் தவறான பாதைகளுக்கு ஞான கல்வி அவசியம் என்று கூற வந்த அவர் அருகில் இருந்தவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா சரி சொல்லுவோம் என விமர்சனம் செய்தபடி பதில் அளித்தார்.
சென்னையில் அரசுப் பள்ளியில் மறு பிறவி பாவ புண்ணியம் பேசிய போது அரசு பள்ளியில் ஆன்மீகத்தை போதிக்கிறீர்கள் என ஆசிரியர் வாக்குவாதம் செய்த நிகழ்வு பெரும் பரபரப்பான நிலையில் மகா விஷ்ணு மீண்டும் ஞான கல்வி அவசியம் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்