க.சண்முகவடிவேல்
திருச்சி ஜங்ஷன்- மயிலாடுதுறை வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மெயின் லைனில் இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் சிறிய மாற்றம் செய்யப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த விபரம் வருமாறு: திருப்பாதிரிபுலியூர்-திருச்சி ஜங்ஷன் இடையேயான முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06889) வரும் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை திருப்பாதிரிபுலியூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பொன்மலை வரை மட்டுமே இயக்கப்படும். பொன்மலை மற்றும் திருச்சி ஜங்ஷன் இடையேயான பகுதிக்கு இயக்கப்படாது.
அதேபோல், கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 12084) வரும் 14, 15-ம் தேதிகளில் கோவையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். திருச்சி-மயிலாடுதுறை இடையே ஒரு பகுதிக்கு மட்டும் இயக்கப்படாது.
மயிலாடுதுறை-கோவை இடையேயான ஜனசதாப்தி அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12083) வழக்கமாக மயிலாடுதுறை சந்திப்பில் பகல் 2.55 மணிக்கு புறப்படும். ஆனால் இந்த ரயில் வருகிற 14, 15-ம் தேதிகளில் மயிலாடுதுறை-திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படாது. அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு செல்லும்.
மயிலாடுதுறை-திருச்சி இடையேயான முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16233) வழக்கமாக மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும். ஆனால் இந்த ரயில் வரும் 16-ம் தேதி மயிலாடுதுறை-தஞ்சை இடையே மட்டும் இயக்கப்படும். தஞ்சை-திருச்சி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி-மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டிஎண் 16234) திருச்சியில் இருந்து பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் 16-ம் தேதி திருச்சி-தஞ்சை இடையே இயக்கப்படாது. அதற்கு பதிலாக தஞ்சையில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.
வேளாங்கண்ணி-திருச்சி இடையே முன்பதிவில்லா விரைவு டெமு ரயில் (வண்டி எண் 06839) வேளாங்கண்ணியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும். ஆனால் இந்த ரயில் வருகிற 16-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை திருவெறும்பூர் மற்றும் திருச்சி ஜங்ஷன் வரை இயக்கப்படாது. இந்த ரயில் திருவெறும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல் திருச்சி -மயிலாடுதுறை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16234) திருச்சி ஜங்ஷனில் இருந்து வழக்கமாக பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த ரயில் வரும் 12, 13-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து 50 நிமிடம் தாமதமாக பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
திருச்சி மயிலாடுதுறை ரயில் வழித்தடத்தில் பொறியியல் தொடர்பான சிறு பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் ஓரிரு நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த பயண நேர திட்டத்தை ஏற்று ரயில் பயணிகள் ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்வதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil