Advertisment

அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழக பிராமணர்கள்: எஸ்.வி சேகருக்கு மைத்ரேயன் பதிலடி

தமிழக பிராமணர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அண்ணாமலைக்கு உள்ளது; எஸ்.வி சேகர் கருத்துக்கு முன்னாள் எம்.பி மைத்ரேயன் பதில்

author-image
WebDesk
New Update
Maitreyan-vs-Annamalai

தமிழக பிராமணர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அண்ணாமலைக்கு உள்ளது; எஸ்.வி சேகர் கருத்துக்கு முன்னாள் எம்.பி மைத்ரேயன் பதில்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை பிராமணர்களை புறக்கணிக்கிறார்கள் என்பது திசை திருப்பும் முயற்சி. பிராமணர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அண்ணாமலைக்கு உள்ளது என முன்னாள் எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

Advertisment

அ.தி.மு.க சார்பில் இரண்டு முறை மாநிலங்களவை எம்.பி.,யாக இருந்தவர் டாக்டர் மைத்ரேயன். இவர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி சமீபத்தில் பா.ஜ.க.,வில் இணைந்தார்.

இதையும் படியுங்கள்: உளவுத் துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் மாற்றம்: அருண், செந்தில் வேலனுக்கு முக்கிய பதவிகள்

இந்தநிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக செயல்படுவதாக எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் எப்போதும் ஜாதி, மத பாகுபாடு பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது, பழகுவது கிடையாது. என்னோடு பழகிய அனைவருக்கும் இது நன்றாகத் தெரியும். ஆனால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் பாரதிய ஜனதா கட்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிராமணர்களை புறக்கணிக்கிறார் என்று திட்டமிட்ட ரீதியில் வதந்தி பரப்புகின்றனர்.

நான் பிராமண சங்க அமைப்பினருடனும், பரவலாக மாநிலம் முழுக்க உள்ள பிராமணர்களோடும் நல்ல தொடர்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறேன். பலர் என்னிடம் பேசி வருவதில் இருந்து ஒரு தெளிவான கருத்து வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் பிராமணர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அண்ணாமலைக்குத் தான். அண்ணாமலை தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை, புதிய எழுச்சியை ஏற்படுத்த முழு மூச்சுடன், ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார். எனவே அவர் மீது உள்ள நம்பிக்கையினால் தமிழ்நாட்டில் பிராமணர்கள் அண்ணாமலை பின்னால் பெருமளவில் அணி திரண்டு நிற்கிறார்கள்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் இரண்டு துறைகளில் தமிழக பிராமணர்கள் சிறப்பாக வருகிறார்கள் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். எனவே ஏதோ பா.ஜ.க.,வோ, தலைவர் அண்ணாமலையோ தமிழ்நாட்டில் பிராமணர்களை புறக்கணிக்கிறார்கள் என்பது திசை திருப்பும் முயற்சி. தி.மு.க.,வுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தாளும் சூழ்ச்சி. இதில் சில பிராமணர்கள் ஈடுபடுவது வேதனை. ஆனால் தமிழ்நாட்டு பிராமணர்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாக மாட்டார்கள். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு பிராமணர்கள் ஜாதி பார்த்து வாக்களிப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நரேந்திர மோடி பிராமணர் அல்ல, அண்ணாமலை பிராமணர் அல்ல என்று. ஆனால் மோடியும் அண்ணாமலையும் நேர்மையானவர்கள், நியாயமான நல்லாட்சி தருவார்கள் என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

தமிழ்நாட்டு பிராமணர்களுக்காக பகிரங்கமாக குரல் கொடுத்த ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை மட்டும் தான் என்பதை அவர்கள் நன்றியோடு நினைக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ்நாட்டு பிராமணர்கள் ஒட்டுமொத்தமாக அண்ணாமலை பின்னால் தான் இருக்கிறார்கள். ஏனெனில் தமிழக பிராமணர்கள் விரும்புவது மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமையும் போது, அதில் தமிழகத்தின் பங்கும் இருக்க வேண்டும் என்பது தான். நமது ஒற்றை இலக்கு தமிழ்நாட்டிலிருந்து மோடிக்கு ஆதரவாக 25 எம்.பிக்கள் செல்ல வேண்டும். இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Annamalai Sv Sekar Maitreyan Mp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment