கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் துணைத் தலைவராக இருந்த மைத்ரேயன், 1999-ஆம் ஆண்டு தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர், தோல்வியை சந்தித்தார்.
எனினும், அ.தி.மு.க சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக மைத்ரேயன் பதவி வகித்து வந்தார். அதன்படி, கடைசியாக 2019-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் அவர் இருந்து வந்தார்.
அதன் பின்னர், அ.தி.மு.க உடைந்ததில் முதலில் ஓ.பி.எஸ் அணியில் மைத்ரேயன் இருந்தார். அடுத்ததாக இ.பி.எஸ் அணிக்கு மாறிய அவர், 2022-ஆம் ஆண்டு திடீரென ஓ.பி.எஸ்-ஐ சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து, டெல்லி சென்ற மைத்ரேயன் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டார். ஆனால், பா.ஜ.க-வில் இருந்து அவருக்கு எந்த விதமான பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
இந்த சூழலில், மைத்ரேயனை அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவருடன் சேர்த்து முன்னாள் அமைச்சர் வேலுசாமி, முல்லை வேந்தன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.