/indian-express-tamil/media/media_files/2025/10/04/ramanathapuram-sea-cucumber-seizure-2025-10-04-22-22-19.jpg)
ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கியூ பிரிவு போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்குப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காகக் கடல் அட்டைகள் பதப்படுத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து, அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதப்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடல் அட்டைகளைப் பதப்படுத்திய கும்பலைக் கியூ பிரிவு போலீசார் மடக்கிப் பிடிப்பதற்காகச் சுற்றி வளைத்தனர். இதில், தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டார். அங்கிருந்த மற்ற மூன்று பேர் தப்பி ஓடினர். பிடிபட்ட ஷாஜகானிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து, சக்கரக்கோட்டை குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனில் பதப்படுத்தி, பின்னர் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் குடோனில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் அதைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட தளவாடப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. தப்பியோடிய மூவரையும் கியூ பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.