வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்த விவகாரம் தொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கமல்ஹாசன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் வாக்களித்த பின்னர் கோவைக்கு சென்றார். பின்னர் கோவை தெற்கு தொகுதிக்கு வந்த கமல் ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டார். அப்போது, டோக்கன் வழங்கி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும், டோக்கன் கொடுத்து பொருட்களாக வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர்.டோக்கன் வழங்கியது தொடர்பான நகல் தன்னிடம் உள்ளது. அது பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்கள் எனவும் குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து, கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில துணை செயலாளரும், கோவை தெற்கு தொகுதியின் தேர்தல் முகவருமான உதயகுமார் கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சுப்ரமணியனிடம் புகாரளித்தார்.
அதில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கெம்பட்டி காலனியில் வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கடையின் பெயர் அச்சிடப்பட்ட டோக்கன்களை சிலர் விநியோகித்து வருகின்றனர்.அந்த டோக்கன்களைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்பட்டும் வருகிறது. இந்தச் சட்டத்திற்கு புறம்பான செயலால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் தான் இந்த டோக்கன்களை கொடுத்து வருவதாக தெரிகிறது. எனவே உரிய விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"