Arunachalam joins BJP Tamil News : மக்கள் நீதி மய்யத்தில் நிறுவன பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். விவசாயிகளின் நலன் கருதி மட்டுமே மக்கள் நீதி மய்யத்திலிருந்து பாஜகவில் இணைந்துள்ளதாக அருணாச்சலம் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை தி.நகரில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் அருணாச்சலம். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கியது முதலே அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளை அருணாச்சலம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பாஜகவில் இணைந்த பிறகு, “தொலைநோக்கு சிந்தனையுடன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு இது பயனுள்ள திட்டம். இப்படிப்பட்ட பயனுள்ள திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலை கூட்டத்தில் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் விவசாயிகளின் நலன் கருதி முடிவு எடுக்காமல், கட்சியின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுத்தனர். அவை திமுக நிலைப்பாடுகள் போலவே இருந்தன. அப்படியென்றால் இந்தக் கட்சி மையமாக எப்படி இருக்கும். அதனால்தான் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளேன்” என்று செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சலம் கூறுகிறார்.
மேலும், விவசாயத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்ற அடிப்படையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்குத் தான் ஆதரவு அளிப்பதாகவும், கட்சித் தலைமை, விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாமல், விரோதமாக இருப்பதால் மட்டுமே, பதவியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்ததாகவும் அருணாச்சலம் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"