மக்கள் நீதி மய்யம் உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்தார். கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீபிரியா, கமீலா நாசர் உள்பட 11 பேரும் நியமிக்கப்பட்டனர்.
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு, சுமார் 6 மாதங்கள் ஆன நிலையில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (ஜூலை 12) பகல் 11.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அறிவிப்பு நிகழ்வில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் அப்போது பேசுகையில், ‘மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த இயக்க வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினார்கள். இனி அந்தக் குழுவில் இருந்த 11 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து கட்சியை வழி நடத்துவார்கள்’ என அறிவித்தார்.
இதன் மூலமாக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக இயங்கிய பாரதி கிருஷ்ணகுமார், கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட 11 பேரும் செயற்குழு உறுப்பினர்கள் ஆனார்கள்.
மக்கள் நீதி மய்யம் புதிய நிர்வாகிகள்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார். பொதுச்செயலாளராக அருணாசலம், துணைத் தலைவராக ஞானசம்பந்தன், பொருளாளராக சுரேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள். தொடர்ந்து மண்டல நிர்வாகிகள் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யத்தை பதிவு செய்ததை தொடர்ந்து கட்சிக் கொடியையும் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.