மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் தனது பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். பிரசார பேருந்தில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாது;
"கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கும் ஸ்டாலின்"
எப்போது பார்த்தாலும் கூட்டணி, கூட்டணி என்று கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கும் ஸ்டாலின் அவர்களே. இங்கே எழுச்சிபெற்று கடல்போல் மக்கள் காட்சி அளிக்கிறார்கள். மக்கள் முகத்தில் மகிழ்ச்சி. இதுவே வெற்றிக்கு அறிகுறி.
ரெய்டு குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு:
எடப்பாடி பழனிசாமி அவரது உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததால்தான் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருப்பதாக அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி இதை எத்தனை முறைதான் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். அப்படியே சொன்னாலும் பொய் பொருந்த சொல்ல வேண்டும். என் சம்பந்தி வீட்டில் ரெய்டு நடக்கவில்லை.
அமைச்சர் கே.என்.நேரு மீது தாக்குதல்:
இப்படியெல்லாம் பேசி, நான் ஸ்டாலின் பற்றி பேசுவதை குறைந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மடைமாற்றும் விதமாக அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். நேரு அவர்களே... சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது பாதியில் எழுந்து சென்றீர்கள். உங்கள் குடும்பத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. உங்கள் தம்பி வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு. உங்கள் மகன் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததா? இல்லையா?
இவ்வளவு அழுக்கை வைத்து கொண்டு எங்களை விமர்சனம் செய்ய என்ன அருகதை இருக்கிறது?. என்ன யோக்கியதை இருக்கிறது?. நேரு அவர்களே... நீங்கள் யார் சொல்லி பேசுகின்றீர்கள் என்பது தெரியும். எத்தனை முறை பேசினாலும் பொய், பொய் தான். பொய்யை பொய்யாக தான் பேசுகின்றார்கள்.
நீங்கள் நடக்காத ரெய்டை நடந்தது மாதிரி பேசி மக்களை மடைமாற்றம் செய்வதை விட்டு விடுங்கள். நீங்கள் முதலில் தப்பிக்க பாருங்கள். நீங்கள் கொள்ளையடித்த பணத்தை மறைத்து வைத்ததால் தான் அமலாக்கத்துறை உங்கள் வீட்டு கதவை தட்டி, தட்டி உங்கள் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு இருக்கிறது.
"வாரிசு அரசியலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்!"
நான் சொந்த காலில் நின்று உழைத்து கட்சி தொண்டர்கள் ஆதரவு பெற்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அப்படியென்றால் எந்த அளவுக்கு உழைத்து இருப்பேன் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். யாருடைய சிபாரிசு மூலமும் வரவில்லை. உங்களைப்போல் தந்தையின் அடையாளத்தை வைத்து முதலமைச்சர் ஆகவில்லை. கட்சி தலைவர் ஆகவில்லை.
அ.தி.மு.க. கூட்டணி நிலைப்பாடு:
யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்; அது எங்கள் விருப்பம். அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதல்-அமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்கள் என்று எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே... நாங்கள் ஒன்றும் எமாளி அல்ல... அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு (அதிமுக) கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை. எதைப்பத்தியும் கவலையில்லை.
உங்களைப்போல (ஸ்டாலின்), வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை, மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். திமுகவை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணையணும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. திமுகவை அகற்றவேண்டும் என்று பாஜகவும் கருதுகிறது. அதே நிலைப்பாடோடு தான் பாஜக எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.
"திமுகவுக்கு மரண அடி கொடுப்போம்"
இன்னும் சில கட்சிகள் எங்களுடன் இணையவுள்ளன. சரியான நேரத்தில் வரும்; அப்போது உங்களுக்கு (திமுக) மரண அடி கொடுப்போம். 200 தொகுதிகளில் வெற்றிப் பெறுவதுதான் கனவு, ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம். எங்க கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; அதிமுக தான் ஆட்சி அமைக்கும். இதை மடைமாற்றம் செய்து மக்களை குழப்பி ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறார் ஸ்டாலின். பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.