Advertisment

2-ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஜூலை 15-ல் தொடக்கம் - தமிழக அரசு அறிவிப்பு

மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் ஜூலை 15-ம் தேதி முதல் நடத்தப்படவுள்ளன.

author-image
WebDesk
New Update
Tamilnadu CM Stalin

தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் 2-ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான  ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் கடந்த 5 மாதங்களில் நகர்ப்புர உள்ளாட்சிகளில் நடத்தப்பட்ட 2,058 முகாம்களில் மக்களிடம் பெறப்பட்ட 8.74 லட்சம் மனுக்கள் மீது ஒரே மாதத்தில் தீர்வு காணப்பட்டது.

Advertisment

இந்த திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 12,525 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18.12.2023-ல் கோவை மாநகரில்  ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.


முதல் கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட  ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளைப் பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 5 மாதங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில் 520 முகாம்கள், புறநகர்ப் பகுதிகளில் 265 முகாம்கள் என கிட்டத்தட்ட ஒரு வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. 

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முதல் கட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்களில் முன்னதாகவே குறிப்பிடப்பட்ட முக்கியமான 13 துறைகள் மூலம் 44 சேவைகள் குறித்தும், முன்னதாக குறிப்பிடப்படாத சேவைகள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

நகர்ப்புர உள்ளாட்சிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2 இலட்சத்து 64 ஆயிரம் மனுக்களும், பிற சேவைகள் மூலம் பெறப்பட்ட 6 இலட்சத்து 40 ஆயிரம் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் 8 இலட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். 

தமிழ்நாடு அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் முதல்கட்ட வெற்றியைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் குறித்த சிறப்பு முகாம்களை நடத்திட அரசு முடிவு செய்துள்ளது.

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் 2-ம் கட்ட முகாம்கள், வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்திட வேண்டும். இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு  ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் 2-ம் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த 2-ம் கட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்-மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை, உள்-மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூகச் சீர்திருத்த துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த மனுக்கள் இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.

மொத்தம் 37 மாவட்டங்களில் உள்ள 388 ஒன்றியங்களில் அடங்கியுள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஊராட்சிகளை இணைத்து ஏறத்தாழ 20,000 மக்களுக்கு ஒரு சிறப்பு முகாம் வீதம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களைப் பதிவு செய்திட துறை வாரியாக அறைகள் அமைக்கப்படும். அனைத்து மனுக்களும் முதல்வரின் முகவரி என்னும் வளைதளத்தில் பதிவு செய்யப்படும். அனைத்து சிறப்பு முகாம்களிலும் ஒரு பிரத்யேக இ-சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டு, பதிவேற்றப்படும் மனுக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஒப்புகை அனுப்பப்படும்.

இந்த முகாம்கள் நடைபெறுவது குறித்து குறும்படம் தயார் செய்யப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரை மூலம் விளம்பரங்கள் செய்யப்படும். தமிழ்நாடு முழுவதிலும் மக்கள் அரசிடம் எதிர்பார்க்கும் எந்த ஒரு கோரிக்கையையும் விடுபடாமல் கனிவுடன் ஏற்று பரிசீலித்து உரிய முறையில் தீர்வு கண்டு மக்கள் அனைவரும் மனநிறைவுடன் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு நாளும் எண்ணுகிறார்கள்.

அதன் பயனாகத்தான் “மக்களுடன் முதல்வர்” திட்டம் செயல்படுத்தப்பட்டு, மக்களின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தங்கள் பகுதிகளில் நடைபெறக்கூடிய “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் காணுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment