தமிழ்நாடு அரசின் சார்பாக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டமும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தின் மூன்றாம் கட்டம், ஊரகப்பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் சார்பாக பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி மனுக்கள் பெறப்படுகின்றன. அதனப்படையில், கடலூர் மாவட்டத்தில் 9 சட்ட மன்ற தொகுதிகளிலும் மொத்தம் 90 முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த முகாம்களில் இ-சேவை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பதியப்படும் மனுக்களுக்கு 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். எனினும், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சேவை இலவசமாக செய்யப்படவுள்ளது. மேலும், பதிவு செய்யப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாமின் ஒரு பகுதியாக, மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக, சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.