மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மகாதீர் முகம்மது பிரதமர் ஆவதற்கும், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி வெற்றிக்கும் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.
மலேசியா தேர்தல் முடிவு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு : ‘மலேசியாவை நவீனமயம் ஆக்கி பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, புதிய தலைமைச் செயலக நகரை நிர்மாணித்த மகாதீர் முகமது, பின்னர் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்தார். ஆனால் பிரதமர் பொறுப்பில் இருந்த நஜீப்பின் ஊழல் நடவடிக்கைகளால் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்த மகாதீர் முகமது, ‘நம்பிக்கைக் கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கினார்.
பினாங்கு மாநில துணை முதல்வராக இருக்கும் பேராசிரியர் இராமசாமி அவர்கள் செயலாளராக உள்ள ஜனநாயக செயல் கட்சியும் நம்பிக்கைக் கூட்டணியில் இடம் பெற்றது. பேராசிரியர் இராமசாமி இந்தத் தேர்தலில் பினாங்கு சட்டசபைக்கு மீண்டும் போட்டியிட்டு, முன்பு பெற்ற வாக்குகளைவிட மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது செயலாளரும், பினாங்கு மாநகராட்சி உறுப்பினருமான சதீஸ் முனியாண்டி அவர்களும் பினாங்கு சட்டசபைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வெற்றிச் செய்தி கிடைத்தவுடன், பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கும், சதீஸ் முனியாண்டி அவர்களுக்கும் நேற்று இரவிலேயே அலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தேன். இதுவரை பிரதமராக இருந்த நஜீப்பின் தேசியக் கூட்டணி மலேசியாவில் தோல்வியுற்று, மகாதீர் முகமது வெற்றி பெற்று பிரதமராவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பிரதமராகப் போகிற மகாதீர் முகமது அவர்களுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளேன்.’ இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.