கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊடேதுர்கம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலம் ஒன்றில் ஆண் காட்டுயானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பன்னேருகட்டா பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மாநில எல்லைப்பகுதியான தளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. வனப் பகுதியில் இருந்து யானைகள் கிராமத்திற்குள் புகாமல் தடுக்கும் வகையில், சூரிய மின்வேலி அமைக்கும் பணிகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர் .
இந்நிலையில், ஊடேதுர்கம் வனப்பகுதியில் இரண்டு காட்டுயானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வந்தன. இதில், ஆண்யானை வனப்பகுதியில் இருந்து கவிபுரம் கிராமத்தின் அருகே விளைநிலங்களுக்குள் உணவு தேடி சென்றது. பின்னர் மீண்டும் காட்டுக்கு செல்லும்போது அங்குள்ள விளைநிலத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த காட்டுயானை மின்சாரம் தாக்கி இறந்ததா அல்லது விஷ காய்களை தின்று உயிரிழந்ததா ? என்ற கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.