மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் இன்று மாலை கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கி வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இதில், 6.5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் எழுதுவது போன்று உருவாக்கப்பட்ட சிலையை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்கும், கருணாநிதி நினைவிடத்திற்கும் சென்ற மமதா அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பிறகு, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக முன்னாள் எம்எல்ஏ உசேன் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, தமிழில் பேசி வணக்கம் தெரிவித்தர். தொடர்ந்து பேசிய மமதா "அன்பு சகோதரர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் போரில் தீர்க்கமாக போராடக் கூடியவர். மண்ணின் மைந்தனாக திகழ்ந்தவர் கலைஞர். அவரின் சிலையை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
கருணாநிதி அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டவர் கலைஞர். விவசாயிகளுக்காகவும். சிறுபான்மையினர்களுக்காக, கிறிஸ்தவர்களுக்காக பாடுபட்ட மாமனிதராக வாழ்ந்தவர் கலைஞர். அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக போராடியவர்.
என்னுடைய நாடு இந்தியாவாக இருந்தாலும் நான் பிறந்தது வங்க நாட்டில். இதேபோல் ஸ்டாலின் அவர்களும் இந்தியாவில் இருந்தாலும், அவர் பிறந்தது தமிழ்நாட்டில். அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. ஒரு உரிமை இருக்கிறது. அந்த உரிமைக்காக நாம் போராடுவோம்.
தமிழுக்கும், வங்கத்துக்கும் பெரிய தொலைவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நடந்தே தென்னகம் வந்திருக்கிறார். எனது தமிழ் உச்சரிப்பு சரியில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழில் வணக்கம் என்று சொல்வது எனக்கு பிடித்திருக்கிறது.
ஸ்டாலினும் தன மகனுக்கு உதயநிதி என்று சரியாகவே பெயர் வைத்திருக்கிறார். வங்காளத்தில் உதய் என்றால் உதிப்பது என்று அர்த்தம். சூரியன் உதிப்பது போல.
தமிழக மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் மாநில உரிமையை விட்டுக் கொடுக்காத மக்கள். அதற்காகவே நான் உங்களுக்கு சல்யூட் வைக்கிறேன். இதைப் போன்று தொடர்ந்து நாம் நம் மாநில உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும்.
நான் எப்போதும் ஜெய் ஹிந்த்... ஜெய் பங்களா என்று சொல்வேன்... இனி ஜெய் தமிழ் நாடு என்றும் சொல்வேன்"
என்று மமதா உரையாற்றினார்.