மு.க.ஸ்டாலினை போனில் தொடர்புகொண்டு மம்தா பானர்ஜி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 3-வது அணிக்கு இழுக்க நடந்த முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் திமுக செயல் தலைவர் என்ற முறையிலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, திமுக.வுடன் போராட்டங்களில் மட்டும் இணைந்திருக்கிறது.
மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தெட்ட திமுக கூட்டணியில் இணையும் மனநிலைக்கு வந்துவிட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் இன்னமும் திமுக.வை சில இடங்களில் விமர்சிக்கவும் தவறுவதில்லை. காங்கிரஸ் இடம் பெறும் அணியில் இடம் பெறுவது குறித்து தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இன்னும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதனாலேயே தமிழகத்தில் திமுக அணியில் முழுமையாக இணையாமல் மார்க்சிஸ்ட் பின்வாங்குவதாக பேச்சு இருக்கிறது.
இந்தச் சூழலில் வட கிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜக.வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிற மாநிலக் கட்சிகளை சிந்திக்க வைக்கின்றன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இது தொடர்பாக கூறுகையில், ‘பாஜக, காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் தேசிய அளவில் ஒருங்கிணைந்து 3-வது அணி அமைக்க வேண்டும்’ என்றார். அவரது இந்தக் குரலுக்கு முதல் ஆதரவு, மம்தா பானர்ஜியிடம் இருந்து வந்தது.
சந்திரசேகரராவை தொடர்பு கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘இந்த முயற்சிக்கு எனது ஆதரவு உண்டு’ என குறிப்பிட்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியே இப்போது அந்த அணியை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டதாக தெரிகிறது.
மம்தா பானர்ஜி இது தொடர்பாக இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார். ஸ்டாலின் தற்போது தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து போராட்டங்களை நடத்தி வருவது குறித்து தெரியப்படுத்திவிட்டு, தங்கள் கருத்தை பரிசீலிப்பதாக கூறியதாக தெரிகிறது.
மம்தா பானர்ஜி முயற்சி எடுக்கிறார் என்றால், அந்த அணியில் பாஜக, காங்கிரஸுக்கு மட்டுமல்ல... இடதுசாரிகளுக்கும் இடமில்லை. மேற்கு வங்கம், தெலங்கானா மாநில அரசியலுக்கு இது சரி வரலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸையும், இடதுசாரிகளையும் ஒருசேர உதறும் முடிவுக்கு திமுக வராது என்பதே கள எதார்த்தம்! எனவே மம்தாவின் கோரிக்கையை ஸ்டாலின் ஏற்க வாய்ப்பில்லை என்றே திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அணி சேர்க்கும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டதையே மம்தா-ஸ்டாலின் பேச்சு காட்டுகிறது.