தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேங்க் ஸ்டாப் காலனியில் கடந்த 9-ம் தேதி அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக அந்தப் பகுதியில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ள டி.எஸ்.பி நித்யா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனிப்படை உதவி ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் குப்பை பொறுக்கிக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவர்மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் குப்பை பொறுக்கிய இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குப்பை பொறுக்குவதுபோல் நடித்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடித்ததுடன், அவரைக் கைது செய்து நகையையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது; `ஒரே நாளில் ஆளில்லாத மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவின் காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரித்தோம். அதில் ஷார்ட்ஸ், டீ-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் பெரிய கோணிப்பையில் குப்பை பொறுக்குவதுபோல் அங்கும் இங்கும் நோட்டமிட்டுக்கொண்டே சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதில் அந்த இளைஞர் சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சின்ன சிவா என்கிற சிவா என்பது தெரியவந்தது. கைரேகை, அங்க அடையாளங்கள் ஆகியவை ஒத்துப்போனதால் குப்பை பொறுக்குவதுபோல் நடித்து திருட்டு சம்பவத்தில் அவர் ஈடுபட்டதும் உறுதியானது.
பின்னர் சிவாவைப் பிடிக்க சென்னைக்குப் புறப்பட்டோம். கொள்ளையடித்த நகையை வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்துவிட்டு வண்டலூர் அருகேயுள்ள கிராமத்தில் அவர் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தோம். இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸார் திருடன் சிவாவைப் பிடிக்க கைலி (லுங்கி) அணிந்துகொண்டு அதிகாலை நேரத்தில் அவர் பதுங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று மடக்கிப் பிடித்தோம்.
கடலூர்- சிதம்பரத்துக்கு இடையேயுள்ள மூடிக்கிடக்கும் கம்பெனி ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக இரண்டு பேர் ரயிலில் வந்திருக்கின்றனர். ஆனால், இருவரும் தூங்கி விட்டதால் தஞ்சாவூரில் இறங்கியிருக்கின்றனர். சும்மா எப்படிப் போறது இங்கேயே திருடுவோம் என முடிவு செய்து, பேன்ட், சர்ட் என டிப்-டாப்பாக இருந்தவர்கள் ஒதுக்குப்புறமாகச் சென்று அழுக்கு ஷார்ட்ஸ், டீ ஷர்ட் அணிந்திருக்கின்றனர். கடையில் பெரிய கோணிப்பையை வாங்கி குப்பை பொறுக்குவதுபோல் நடந்து சென்று ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டிருக்கின்றனர்.
இதனால் யாருக்கும் அவர்கள்மீது சந்தேகம் ஏற்படவில்லை. கதவுகள் மூடியிருந்தால் வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடியிருக்கின்றனர். ஆளில்லாத மூன்று வீடுகளைக் குறிவைத்து கைவரிசை காட்டியிருக்கின்றனர்.
கொள்ளையடித்த பணம், நகையுடன் திருச்சிக்குச் சென்றவர்கள் அங்கு துணிக்கடைக்குச் சென்று புது பேன்ட், ஷர்ட் எடுத்து போட்டுக்கொண்டு, ரயிலில் சென்னைக்குச் சென்று விட்டனர். வழியில் சில இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். சிக்கிய நபரிடமிருந்து நகையை மீட்டிருக்கிறோம். தப்பி ஓடிய மற்றொரு இளைஞரைத் தேடிவருகிறோம்” என்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“