க.சண்முகவடிவேல்
Thanjavur: சாமார்த்தியமாக பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பியும், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பலமான பொருட்களை கொண்டு தாக்காமல், அன்றாட பொருட்களை வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கிடையே தஞ்சையில் தம்மிடம் நிறைய நகை வைத்திருந்தால் திருமணத்திற்கு பெண் தருவார்கள் என்றக் காரணத்திற்காக ஒருவர் கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிகிறார். கடந்த 20-ம் தேதி மாலை, கீதாவும் அவரின் மகளும் வீட்டுக்கு வந்த போது, முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்று பார்த்ததில் பீரோவில் இருந்த 48 சவரன் நகை, ரூ.10,000 கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கீதா, மருத்துவக்கல்லுாரி போலீஸில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டது தனிப்படை போலீஸ் டீம். அதில் ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவின் பதிவுகளை வைத்து கொள்ளையனை அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், நாஞ்சிக்கோட்டை சாலை சித்ரா நகரை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞர் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர். கைதான வெங்கடேசன் தான் கொள்ளையடிக்கக்கூறிய காரணம்தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
/indian-express-tamil/media/post_attachments/f92a303f-8ff.jpg)
இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெங்கடேசன் சொன்னதனை நம்மிடம் தெரிவிக்கையில், 'வெங்கடேசனுக்கு தலையில் முடி இல்லாததால் திருமணம் செய்து கொள்வதற்கு யாரும் பெண் தரவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவர் பெண்ணுக்கு தானே நகை போட்டு கொள்கிறேன் என்றால் பெண் தருவார்கள் என நினைத்துள்ளார். தன்னிடம் நகை அதிகமாக இருந்தால் தமக்கு எளிதில் திருமணம் நடக்கும் என நினைத்தவர் அதற்காகவே கொள்ளையடித்தாராம்.
யூடியூபில் வீடியோ பார்த்து விட்டு கதவை உடைப்பதற்காக கட்டிங் மிஷின் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்கியுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டமில்லாத வீட்டை தேர்ந்தெடுத்து பல நாட்கள் நோட்டம் விட்டுள்ளார். பல மணி நேரம் வீட்டில் ஆளில்லாமல் இருப்பதையும் கவனித்துள்ளார். அதன் பின்னர் தன்னுடைய அடையாளாம் தெரியாமல் இருப்பதற்காக தலையில் விக் வைத்து சென்று கதவை உடைத்து கொள்ளயடித்துள்ளார்.
போலீஸில் சிக்காமல் இருப்பதற்காக 15 கிலோ மீட்டர் சுற்றி கொண்டு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதே போல் கடந்த ஆயுதபூஜை அன்று, சரபோஜி கல்லுாரியில் வார்டனாக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் வீட்டிலும் 12 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து இருக்கிறார்.
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதில் இருப்பதற்கும் வெங்கடேசனை நேரில் பார்ப்பதற்கும் ஆள் ரொம்பவே வித்யாசமாக இருந்தார். வெங்கடேசனிடமிருந்து 60 சவரன் நகை, ஏ.டி.எம் கார்டு, வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் அவரை சிறையில் அடைத்திருக்கிறோம்’’ என்று சிரிப்புடன் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“