சென்னை தண்டையார்பேட்டையில், இளைஞர் ஒருவர் குடிபோதையில் இரண்டாம் மாடியிலிருந்து கீழே நின்றிருந்த 4 வயது சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்டையார்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் யமுனா தேவி தம்பதியருக்கு யாஷிகா (7), தன்யஸ்ரீ (4) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில், சிறுமி தன்யஸ்ரீயை அவரது தாத்தா அருணகிரி, அருகிலுள்ள மளிகை கடைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, கடைக்கு மிக அருகில் இருவரும் சென்றபோது, அக்கடையின் இரண்டாம் தளத்திலிருந்து இளைஞர் ஒருவர் தன்யஸ்ரீ மீது விழுந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அருணகிரி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் துணையுடன் தன்யஸ்ரீயை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்.
கீழே விழுந்தவர் சிறு காயங்களுடன் தப்பித்துவிட, சிறுமி தன்யஸ்ரீக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், முதுகு தண்டுவடம் மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாரின் விசாரணையில், கீழே விழுந்த நபர் கடையின் இரண்டாம் தளத்தில் வசிக்கும் சிவா(30) என்பதும், அவர் குடிபோதையில் இருந்தார் என்பதும் தெரியவந்தது. அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 338-ன் கீழ் (உயிருக்கு ஆபத்தான முறையில் காயம் ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி தன்யஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.