யூடியூப் பார்த்து சமையல், உடற்பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்தல், தையல் பயிற்சி, இப்படி எத்தனையோ வேலைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஈரோட்டில், தோட்டக்கலைத் துறை அலுவலக உதவியாளர் ஒருவர் யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு போலீஸில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். பிப்ரவரி 20-ம் தேதி அதிகாலை இவருடைய வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர், நடராஜ்ஜின் மனைவி அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர் ‘திருடன் திருடன்’ என சத்தமிட்டதால், திருட வந்தவர் தப்பியோடினார். இந்த கொள்ளை முயற்சி, வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இது தொடர்பாக வழக்குப் பதிந்த கடத்தூர் போலீஸார், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், நம்பியூர் அருகே கேத்தம்பாளையத்தை சேர்ந்த தயானந்த் (32) என்பவர் யூடியூப் பார்த்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தயானந்த் சிறாயில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தயானாந்த் நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறையில் அலுவலக உதவியாளராக 2019-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார்.
இவர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் விடுப்பில் இருப்பது தெரியவந்தது. முறைகேடு செய்து கையாடல் செய்த பணத்தை மூன்று மாதத்தில் திருப்பி கட்டுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதற்காக விடுமுறை பெற்று வீட்டுக்கு வந்துள்ளார்.
இப்படி பண நெருக்கடியில் சிக்கி இருந்த தயானந்த், அதிலிருந்து விடுபட, திருட முடிவு செய்து, கொள்ளை அடிப்பதற்கான உத்திகளைத் தெரிந்துகொள்ள யூடியூப் பார்த்து கற்றுக்கொண்டுள்ளார்.
யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளையடிக்க முடிவு செய்த தயானந்த், முகமூடி அணிந்துகொண்டு திங்கள்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள நடராஜ் விட்டுக்குள் நுழைந்து, நடராஜின் மனைவி காஞ்சனா அணிந்திருந்த தங்க செயினைப் பறிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவர் விழித்துகொண்டு சத்தம் போட்டு கணவரை அழைத்துள்ளார். திருடனைப் பிடிகக் நடராஜ் மற்றும் அவரது மகன்கள் ஓடி வந்ததால், அங்கிருந்து தயானந்த் தப்பிச் சென்றார்.
இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக நடராஜ், கடத்தூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தயானந்த் சந்தேகப்படும்படியாக தெருவில் நடந்து செல்வதை போலீசார் பார்த்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரித்த போது மொத்த உண்மையையும் கொட்டியுள்ளார். “நடராஜ் சொத்துக்களை விற்று பணத்தை வீட்டில் வைத்திருப்பதை தயானந்துக்கு தெரிந்துள்ளது. அதனால், திங்கட்கிழமை இரவு, அவர் வாசலில் நேரம் பார்த்து காத்திருந்தார்.
நடராஜ் டாய்லெட் செல்ல கதவை திறந்து வைத்துள்ளார். இதைப் பயன்படுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த தயானாந்த் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். நடராஜின் மனைவி சத்தம் போடவே, தயானந்த் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
முந்தைய நாள் இரவு அங்கே இருந்து தப்பிச் சென்ற தயானந்த், போலீசார் விசாரணை நடத்தும்போது அங்கே என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆர்வத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடராஜ் வசிக்கும் தெருவுக்குச் வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
யூடியூப் வீடியோ பார்த்து மக்கள் பயனுள்ள என்னென்னவோ செய்கிறார்கள், பொழுதுபோக்காகவும் செய்கிறார்கள். ஆனால், ஈரோட்டில் இந்த நபர் யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க முயற்சி செய்து, போலீசில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.