scorecardresearch

மேடநாடு எஸ்டேட் அத்துமீறல்: தமிழக அமைச்சர் மருமகனுக்கு வனத் துறை நோட்டீஸ்

நீலகிரி ‘மேடநாடு’ பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் உள்ள அமைச்சரின் மருமகன் தேயிலைத் தோட்டத்துக்கு அனுமதி ஏதும் பெறாமல் அத்துமீறி 2 கி.மீ தூரம் வரை சாலை அமைத்தது தொடர்பாக வனத்துறையினர் 3 பேரை கைது செய்தும், அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ் அனுப்பியும் உள்ளனர்.

Medanad estate
Medanad estate

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதிக்கு அருகில் ‘மேடநாடு’ வனப்பகுதி உள்ளது. யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளும், அரிய வகை பறவைகள், பூர்வீக சோலை மரக்காடுகளும் உள்ளன. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை வனத்துறை `மேடநாடு வனப்பகுதி’ என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், மேடநாடு பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்துக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை பணிகள் நடைபெறுவதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற வனத் துறையினர், சட்டவிரோதமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து, அனுமதி பெறாமல் சாலை பணியில் ஈடுபட்ட எஸ்டேட் மேலாளர், கனரக இயந்திர ஓட்டுநர்கள் என மொத்தம் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், ரோடு ரோலர் ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோத்தகிரி கேர்பெட்டா டானிங்டன் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(35), அசாம் மாநிலத்தை சேர்ந்த உமர் பரூக் (26) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ்குமார் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், மேடநாடு எஸ்டேட் மற்றும் நிலம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது. எஸ்டேட்டிற்கு செல்லும் பாதையை சாலையாக மாற்ற அனுமதியின்றி பணிகள் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக எஸ்டேட் உரிமையாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிவக்குமார் வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Manager of estate owned by tamil nadu ministers son in law arrested for illegal road

Best of Express