திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகின்றது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி கோரிக்கை வைத்தும் பலனில்லை.
நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்த போதும் அதைப்பற்றி அதிகாரிகள் யாரும் கவனத்தில் கூட கொள்ளவில்லை. இப்படி நாய்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் தான் நகராட்சி அலுவலக வளாகப்பகுதியில் கூட 15 க்கும் மேற்பட்ட நாய்கள் குடிகொண்டு நகராட்சிக்கு வரும் மக்களை விரட்டும் சம்பவம் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது. நேற்று காலை முதல் இரவு வரை மட்டும் மஸ்தான் தெரு மற்றும் காந்திநகர் பகுதிகளை சுற்றித்திரிந்த வெறிநாய்கள் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியுள்ளது.
நாய் கடி பாதிப்புக்கு ஆளானவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி நிகழாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 200 -க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் மணப்பாறை பகுதியில் பாதிக்கப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். ஜனவரி 11 ஆம் தேதி நாய்க்கடி பாதிப்புக்கு ஆளான நாகராஜ் என்பவர் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நகராட்சி அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து வைத்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனார்.
மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றவர்கள் மட்டும் 200 க்கும் மேற்பட்டோர். இதுமட்டுமின்றி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருகில் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுச் சென்று கொண்டு தான் இருக்கின்றனர். இப்படியாக நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருவது ஒருபுறம் என்றாலும் நாய் கூட்டம் சாலைகளில் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும், உடல் உறுப்புக்களை இழந்தவர்களும் அதிகம் உள்ளனர்.
இப்படியாக தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டே இருப்பதை நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கின்றதே தவிர அதை கட்டுப்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் செவலூர் பிரிவு சாலை அருகே நாய்களுக்கு கருத்தடை செய்து பராமரிக்கும் அறை இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் விட்டு விட்டு பாழடைந்து வரும் நிலையும் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றது.
நாய்க்கடிக்கு மக்கள் ஆளாகி அவதிப்பட்டு வரும் சூழலில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிப்பதாகவும், எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், நாய்க்கடியில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மணப்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு விடுத்துள்ளனர்.
முன்னதாக, நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாயும், வெள்ளாடு, செம்மறி ஆடு ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாயும், கோழி ஒன்றுக்கு 200 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.