/indian-express-tamil/media/media_files/2025/08/22/manapparai-2025-08-22-18-28-16.jpg)
Trichy
திருச்சி மாவட்டம், மணப்பாறை சார் நிலை கருவூல அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார் (51) எதிர்பாராத விதமாக இறந்து கிடந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பதவியில் பணியாற்றி வந்த செந்தில்குமார், கடமையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
அலுவலகப் பணிகள் அதிகமாக இருக்கும் நாட்களில், அவர் அலுவலகத்திலேயே தங்கி விடுவது வழக்கம். வழக்கம்போல் புதன்கிழமை இரவு அலுவலகப் பணிக்காக அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். அடுத்த நாள் காலை, அலுவலகத்தை சுத்தம் செய்ய வந்த தூய்மைப் பணியாளர்கள், செந்தில்குமார் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், செந்தில்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து திருச்சி கருவூல அலுவலர் பாபு, காவல் துணைக் கண்காணிப்பாளர் காவியா, ஆய்வாளர் சீனிபாபு ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். செந்தில்குமாரின் மரணத்திற்கான காரணம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழுமையான தகவல்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரியவரும்.
க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.