மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்கவும், சிறிய ரக விமானங்களை பாதுகாக்கவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள 'மாண்டஸ்' புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புயல் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், சென்னையில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: உருவானது மாண்டஸ் புயல்.. எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு
இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய தயார்நிலைகள் குறித்து ஆலோசிக்க விமான நிலைய அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள், பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை விமான நிலைய ஆணைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய வானிலை மைய விமான நிலைய அதிகாரி வி.ஆர்.துரை, விமான நிலைய செயல்பாடுகள் பிரிவு பொதுமேலாளர் எஸ்.எஸ்.ராஜு உள்ளிட்ட அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்ள அவசர கால அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டது. சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று அல்லது சீரற்ற காலநிலையில் அவை நகராதவாறு தரையை கையாளும் கருவிகளை பாதுகாப்பதற்கு தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.
பலத்த காற்று காரணமாக விமான நிலையச் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்துக்கு தங்கள் விமானங்களை மீட்டு வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவு செய்யப்பட்டது. அவசர காலத்தின்போது விமான நிலைய உணவு கூடங்களில் போதுமான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைப்பதை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு சென்னை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil