சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று (நவ.20) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதோடு மத்திய அரசின் செயலுக்கு எதிராகவும், முக்கிய விவகாரங்கள் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள் மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும், மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடும் வகையிலும் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் இப்போதாவது மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ள படகுகளைத் திரும்ப பெறவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்தி மாத வாரம் என விழா எடுப்பது, நாடு முழுவதும் - வலியுறுத்தப்பட்டு வரும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது போன்றவற்றை முன்னிருந்தி’ மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூர் விவகாரத்தில் இனியும் வேடிக்கை பார்க்காமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், மத்திய பாஜக அரசும் மணிப்பூரைக் கை கழுவி விட்டதாகவே தெரிகிறது.
இரண்டு அரசுகளின் அலட்சியத்தின் காரணமாக இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. இனியும் வேடிக்கை பார்க்காமல் - மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, மனிதநேயம் உயிர்பெற மத்திய பாஜக அரசு, குறிப்பாக, நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 விழுக்காடு நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50 விழுக்காடு நிதியை மத்திய அரசு தர வேண்டும். தமிழகத்தின் கோரிக்கைகள் 16-வது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும். அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவோம், திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் 2026ல் திமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள். திமுக அரசின் சாதனைகள், திட்டங்கள், தமிழக முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று திமுக தொண்டர்கள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.