அமைச்சர் காமராஜ் மீதான புகாரில் நடத்தபட்ட விசாராணை குறித்த அறிக்கையை அக்டோபர் 27ஆம் தேதி காவல்துறை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் கீழவாழாச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் எஸ்.வி.எஸ்.குமார், சென்னை மந்தைவெளியில் வாங்கிய வீட்டை காலி செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. வீட்டை காலி செய்ய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் மைத்துனர் ராமகிருஷ்ணனின் உதவியை நாடி, அமைச்சர் காமராஜ் முன்னிலையில் 4 தவணையாக 30 லட்சத்தை கொடுத்துள்ளார்.
வீட்டை காலி செய்து கொடுக்காமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்ததால், பணத்தை திருப்பி கேட்டபோது குமாரை மிரட்டியதாக 2015 ஆம் ஆண்டு மன்னார்குடி டிஎஸ்பி-யிடம் புகார் கொடுத்துள்ளார். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்ததையடுத்து, மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ், அவரது மைத்துனர் ராமகிருஷ்ணன் மீதும் மிரட்டல் மற்றும் மோசடி பிரிவுகளில் மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மன்னார்குடி நகர காவல் நிலைய வழக்கில் எவ்வித விசாரணையோ, முன்னேற்றமோ இல்லை என்பதால் வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ அல்லது தன்னிச்சையான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டுமென எஸ்.வி.எஸ்.குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு பதிவு செய்யப்பட்டபிறகு 23 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும்; ஆனால் மனுதாரருக்கு 4 முறை அழைப்பு விடுத்தும் அவர் விசாரணைக்கு ஆஜராஜவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதி, மனுதாரர் எஸ்.வி.எஸ்.குமார் அக்டோபர் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுவரை நடத்தபட்ட விசாரணை குறித்த அறிக்கையை காவல்துறை 27ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்