நடிகர் மனோபாலா மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘மயில்சாமி, மனோபாலா திடீர் மரணங்கள் அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் வெளியே போகவே பயமா இருக்கிறது என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என முத்திரை பதித்தவர் நடிகர் மனோ பாலா. இவர் கல்லீரல் பிரச்னை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருடைய இல்லத்தில் புதன்கிழமை காலமானார். மனோபாலாவின் திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோடம்பாக்கம் வந்து காத்திருந்து பார்ப்பார் – இளையராஜா</strong>
மனோபாலா மறைவுக்கு இசையமைப்பாளர் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் இளையராஜா கூறியிருப்பதாவது: “என்னிடம் மிகுந்த மரியாதை, மதிப்பும் வைத்திருந்த நண்பர் இயக்குனர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன்.
மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராகவும், பின்ன இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.
அதற்குப் பிறகு தானே சொந்தமாக படங்களை இயக்க ஆரம்பித்தார். எல்லா காலங்களிலும் என்னை சந்தித்து சந்தித்து வந்தார். என்னை பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பிய உடனே கோடம்பாக்கம் வந்து காத்திருந்து பார்ப்பார்.
பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும் என்னிடம் வந்து அவ்வப்போது நடக்கும் விஷயங்களை சொல்லி விடுவார். ரெக்கார்டிங் நேரத்தில் சொல்லி என்னை மகிழ்விப்பார்” என்றார்.
அருமை நண்பர் மனோபாலா இறப்பு மிகவும் வேதனை – ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தும் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அருமை நண்பர் மனோபாலாவின் இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ள ரஜினி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
45 வருட பழக்கம் – சத்யராஜ் இரங்கல்
“நானும் மனோபாலாவும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள். அவரது இயக்கத்தில் பிள்ளை நிலா மற்றும் மல்லு வேட்டி மைனர் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மனோபாலாவின் மறைவு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. மனோபாலாவின் குடும்பத்திற்கும் திரையுலகினருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
ஐயோ.. என்னால் முடியவில்லை – வடிவேலு
மறைவு குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுகையில், “மனோபாலா பெரிய இயக்குநர், கிரியேட்டர், சிந்தனையாளர். அவர் காலமானது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் மிகவும் சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர். எல்லா நடிகர்களுடன் நடிக்கும் போது அவர் மேற்கொண்டு சில கருத்துகளை சொல்லி நடிப்பவர். எல்லோருடன் அன்பா பாசமாக பழகக்கூடியவர். நல்ல மனிதர். மதுரையில் எங்க அப்பா திதிக்காக வந்திருக்கிறேன். இந்த செய்தியைக் கேட்ட வுடன் ரொம்ப அதிர்ச்சி ஆகி விட்டது. வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து தருவார். யாருக்காவது எதாவது ஒன்று என்றால் உடனே சென்று நிற்பவர். விவேக் அடுத்து இவர் போன்றவர் எல்லாம் செல்வது ரொம்ப துயரமாக இருக்கிறது.
அவரின் குடும்பத்தினருக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஐயோ.. என்னால் முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கு. இதுக்கு மேல நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்; அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்”
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்; அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்”
அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம்: பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான மனோபாலா உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்; அவரது குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்
பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை: “பிரபல திரைப்பட இயக்குனரும், சிறந்த நடிகருமான மனோபாலா காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்; அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்”
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்: எனது அன்பு நண்பர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“