பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யினரின் எதிர்ப்பை தொடர்ந்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.ஆங்கிலம் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades (தோழர்களுடன் ஒரு பயணம்) என்ற நூல் பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு எழுத்தாளர்கள், அரசியல் வாதிகள் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய். இவர் The God of Small Things (சின்ன விஷயங்களின் கடவுள் காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் என்ற தனது முதல் நாவலுக்கு புக்கர் பரிசு பெற்று உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரானார். அதன் பிறகு, அருந்ததிராய் தொடர்ந்து, அரசியல் கட்டுரைகளை எழுதினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பச்சை வேட்டை என்ற பெயரில் நடத்தப்பட்ட அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதினார்.
தொடர்ந்து, புனைவு எழுத்தாளரான அறிமுகமான அருந்ததிராய், தனது முதல் நாவலுக்குப் பிறகு, எழுதியது புனைவு அல்லாத அரசியல் கட்டுரைகள் தான். அவருடைய தீவிரமான விமர்சனங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. அமெரிக்க ஆதிக்கத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு புனைவு எழுதினார். The Ministry of Utmost Happiness என்ற நாவல் வெளியானது. ஆனால், அவருடைய முதல் நாவலான The God of Small Things அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.
அருந்ததிராய் தலைமறைவாக உள்ள மவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய உரையாடலை Walking with the Comrades எழுதி 2011ம் ஆண்டு நூலாக வெளியானது. இந்த நூல், மாவோயிஸ்ட்களை வேறு ஒரு கோணத்தில் படம்பிடித்து காட்டியது.
அருந்ததிராயின் படைப்புகள் உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பாடதிட்டமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades பாடமாக வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யினர் அருந்ததிராய் மாவோயிஸ்ட்கள் பற்றி எழுதிய Walking with the Comrades நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழககம் அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades நூலை பாடதிட்டத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் கே.பிச்சுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அருந்ததிராயின் நூல் நீக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் எம்.கிருஷ்ணன் எழுதிய My Native Land: Essays on Nature என்ற நூலில் இருந்து சில கட்டுரைகள் பாடமாக வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
அருந்ததிராயின் Walking with the Comrades புத்தகம் 2017ம் ஆண்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் மாணவர்களுக்கு மூன்றாவது பருவத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்த நூலில் அருந்ததிராய் மாவோயிஸ்டுகளை புகழ்ந்துள்ளார் என்பது பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அது குறித்து விவாதிக்க பல்கலைக்கழகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு அருந்ததிராயின் நூலை பாடதிட்டத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளது. அதன் பிறகே, பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும். pic.twitter.com/vjKKybSSAR
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 12, 2020
அருந்ததிராயின் நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டதற்கு ஏ.பி.வி.பி மட்டுமல்லாம பிற அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருந்ததிராயின் நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு, திமுக எம்.பி-யும் கவிஞருமான கனிமொழி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்.” என்று தெரிவித்துள்ளார்.
அருந்ததிராயின் புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு எழுத்தாளர் அழகிய பெரியவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “ABVP -அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்கிற மாணவர் அமைப்பின் எதிர்ப்பை ஏற்று மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தன் பாடதிட்டத்தில் இருந்து அருந்ததிராய் எழுதிய 'தோழர்களுடன் ஒரு பயணம் ' என்ற நூலை நீக்கி இருக்கிறது. அன்புத் தோழர் முத்துக்கிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வந்த நூல் இது. இந்த நூலை பாட திட்டத்தில் இருந்து நீக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது. மாணவர்கள் எல்லா வகையான நூல்களையும் படிக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் சுயசிந்தனை வளரும். இன்னின்ன நூல்களையெல்லாம் படிக்க கூடாது என்று தடுப்பது எதேச்சதிகாரம்.
வட மாநிலங்களில் அதிகாரம் செய்து கொண்டு இருந்த இது போன்ற வலதுசாரி அமைப்புகள் எல்லாம் இப்போது தமிழகத்தில் தன்னுடைய வேலைகளை 'தீவிரமாக' தொடங்கி விட்டன. அதனுடைய அடையாளங்கள் தான் தமிழகத் தலைவர்களை பகிரங்கமாக மிரட்டுவது. தமிழ்க் கடவுளர் மீது திடீர் பாசம் பொழிந்து, அவர்களை அரசியலுக்கு இழுத்து வருவது. கருத்துச் சுதந்திரத்தை எதிர்ப்பது.
ஒரு பக்கம், இது தமிழ் நாடு. இங்கு எதுவும் நடக்காது என்று சொல்வது கேட்டுக்கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் எல்லாம் நடந்து கொண்டே இருக்கின்றன.
இதை நான் புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்துடனும் தொடர்பு படுத்தி பார்க்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல்களில் என்ன வகையான பொருள் கொண்ட பாடங்கள் இருக்க வேண்டும் என்பதை இனிமேல் நடுவனரசும், அதைச் சார்ந்த அமைப்புகளும் தான் தீர்மானிக்கப் போகின்றன. அதற்கான இடத்தை புதிய கல்விக் கொள்கை வழங்குகிறது.
பொறுத்திருந்து பாருங்கள். இனி நமது பிள்ளைகள் திருக்குறளை பாட திட்டத்தில் வைத்து படிப்பதற்கு கூட தடை வரலாம். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.” எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில்
அருந்ததிராய் படைப்பு
நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்.
அறிவுத்துறையை அரசியல்
சூழ்வது அறமில்லை.
சாளரத்தை மூடிவிட்டால்
காற்றின் வீச்சு நிற்பதில்லை.
— வைரமுத்து (@Vairamuthu) November 12, 2020
அருந்ததிராயின் புத்தகம் பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை. சாளரத்தை மூடிவிட்டால்
காற்றின் வீச்சு நிற்பதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.