மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ஜாமீன்

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக, பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி சென்னை வந்த போது, அவ்ரது வருகையை எதிர்த்து பல்லாவரத்தில் போராட்டம் நடைபெற்றது. சீமான் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில், 18 பேர் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக பல்லாவரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் 18 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தரப்பில் ஜாமீன் கேட்டு சீமானின் வக்கீல் சீனுவாசகுமார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 18 பேரும் மறு உத்தரவு வரும்வரை திருத்தணி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஜாமீன் வழங்கினார். மன்சூர் அலிகானின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் மட்டும் செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

×Close
×Close