scorecardresearch

மெரினா மாற்றுத்திறனாளி மரப்பாதையில் இடையூறு… கவிஞர் மனுஷ்யபுத்திரன் மாற்றுக் கருத்து

மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகள், கடலுக்கு சென்று கால் நனைக்க ஏதுவாக மெரினாவில் அமைக்கப்பட்ட மரப்பாதையை மாற்றுத்திறனாளி அல்லாதவர்களே அதிகம் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில்ல் கவிஞர் மனுஷ்யபுத்திரன் மாற்றுபார்வையை முன்வைத்துள்ளார்.

Marina, Marina beach, physical challenger path in marina, chennai, tamilandu, poet Manushyaputhiran, Manushya Puthiran

மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகள், கடலுக்கு சென்று கால் நனைக்க ஏதுவாக மெரினாவில் அமைக்கப்பட்ட மரப்பாதையை மாற்றுத்திறனாளி அல்லாதவர்களே அதிகம் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில்ல் கவிஞர் மனுஷ்யபுத்திரன் மாற்றுபார்வையை முன்வைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் சக மனிதர்கலைப் போல, கடற்கரைக்கு சென்று கடல் அலையில் கால் நனைக்கும் எளிய ஆசைகூட அவர்களுக்கு மிகவும் கடினமானதுதான். அவர்களின் இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட நிரந்தர மரப்பாதையை உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கடல் அருகே சென்று கடல் அலையைக் கண்டுகளிக்க வசதியாக மரப்பாதை அமைக்கப்பட்டதற்கு மாற்றுத் திறனாளிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மரப்பாதையை மாற்றுத்திறனாளி அல்லாதவர்களே அதிகம் பயன்படுத்துவதாகவும் இதனால், அதன் நோக்கமே சிதைகிறது என்றும் புகார்கள் எழுந்தன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை அனைவரும் பயன்படுத்துவதால் இந்த திட்டத்தின் நோக்கமே சிதைகிறது, இந்த நிலை நீடித்தால் மரப்பாதை விரைவில் சேதமடையும் என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகளின் அழகை மாற்றுத்திறனாளிகள் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், மணற்பரப்பில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. இந்த மரப்பாதையில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக செல்லலாம். சக்கர நாற்காலிகளில் செல்பவர்கள் எளிதாக செல்லலாம். இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) திறந்துவைத்தார்.

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மரப்பாதையை, மாற்றுத்திறனாளி அல்லாத பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், மரப்பலகை விரைவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இந்த மரப்பலகை பாதையை பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட மரப்பாதையை, மாற்றுத்திறனாளி அல்லாதாவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால், அதன் நோக்கமே சிதைகிறது என்றும் மாற்றுத்திறனாளிகள் அதில் செல்வதற்கு மிகுந்த இடையூறு ஏற்படும் என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதனால், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

ஆனால், கவிஞரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகருமான மனுஷ்யபுத்திரன், மாற்றுத் திறனாளிகள் மட்டும்தான் அந்தப் பாதையை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு மாற்றுத்திறனாளி, இவர் மாற்றுத்திறனாளிகள் பொது போக்குவரத்து, அரசின் பொது இடங்களில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தெரியப்படுத்தி வந்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில்தான், கவிஞர் மனுஷ்யபுத்திரன், மாற்றுத் திறனாளிகள் மட்டும்தான் அந்தப் பாதையை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ‘மெரீனாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்தில் எல்லோரும் நடந்து செல்வது குறித்த கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். இதில் எனக்கு சற்று மாறுபட்ட பார்வை இருக்கிறது. அந்த மரப்பாலத்தை அதிகமானோர் உபயோகித்தால் அது சேதமடைய வாய்ப்பிருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர அதை மாற்றுத் திறனாளிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல. அது மாற்றுத் திறனாளிகளைத் தனிமைப்படுத்தும் கொள்கையாகும்.

பார்க்கிங், டாய்லட் போன்றவற்றில் தனி ஏற்பாடுகள் என்பது சில பிரத்யேக தேவைகள் கருதிச் செய்யப்படுபவை. ஆனால் கடலுக்கு செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பாலம் இருந்தால் அவர்களோடு மற்றவர்களும் இணைந்து நடந்தால்தான் மாற்றுத்திறனாளி என்ற தனிப்பார்வை மறைந்து குறைபாடுகள் எனக் கருதப்படுபவை ‘ நார்மலைஸ் ‘ ஆகும். அந்த மரப்பாலத்தில் பத்து சக்கர நாற்காலிகளோடு சேர்ந்து எனது சக்கர நக்கர நாற்காலியும் ஊர்வலமாகச் செல்வதையோ அல்லது என் சக்கர நாற்காலி மட்டும் தனியாகச் செல்வதையோ நான் விரும்பமாட்டேன்.

நான் நடக்கிற, ஓடுகிற மனிதர்களுடன் இணைந்து செல்லவே விரும்புகிறேன். அங்கு நடப்பவர்களுக்கு இணையாக நானும் நடக்க ஒரு மோட்டார் பொருத்திய தானியங்கி சக்கர நாற்காலியைகூட சமீபத்தில் வாங்கினேன்.

மாற்றுத்திறளிகளுக்கு சில கூடுதல் வசதிகள் தேவை. ஆனால், அது ஒருபோதும் அவர்களை தனிமைப்படுத்துவதாக இருக்கக்கூடாது. ‘நரகத்திற்குப் போகும் பாதை நல்லெண்ணங்களால் ஆனது’ என்ற பொன் வாசகத்தைதான் இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Manushyaputhiran comment on public uses special path of physical challengers in marina beach