scorecardresearch

பெரியார் சிலை முன் மனுதர்ம, வேத, இதிகாச எரிப்பு போராட்டம் அனுமதி மறுப்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை முன், ‘மனு தர்மம், வேத, இதிகாச எரிப்பு’ போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Manusmriti Veda Epic burning protest, Manusmriti Veda Epic burning protest not allowed in Srirangam, HC order, periyar bithday, periyar statue, ஸ்ரீரங்கம், வேத இதிகாச எரிப்புப் போராட்டம், உயர் நீதிமன்றம், தமிழக அரசு, தந்தை பெரியார் சிலை, பெரியார் பிறந்தநாள், திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், சட்டம் ஒழுங்கு, அரசு வழக்கறிஞர், Srinrangam, Periyar Birth Day, Madurai High Court,

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை முன், ‘மனு தர்மம், வேத, இதிகாச எரிப்பு’ போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, கோயிலில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவ்ர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன், மனுதர்மம், வேதங்கள், ஆகமங்களை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் அதிகாரம் மற்றும் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் ரிக், யசூர், சாம, அதர்வன வேதங்கள் மீது இந்து மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் கெடுப்பது ஆகும். இந்தப் போராட்டத்தால் ஸ்ரீரங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், “வேத, இதிகாச எரிப்பு போராட்டம் தொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தலைமையில் செப்டம்பர் 8 ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஒரு மதத்தினரையோ, அவர்களின் வழிபாட்டு முறைகளையோ, மத நம்பிக்கையோ அவமதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க முடியாது. இதனால், போராட்டத்தை கைவிட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. மேலும், போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை” என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக கோட்டாட்சியர் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். போராட்டத்துக்கு போலீஸார் அனுமதியும் வழங்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில், போராட்டக்காரர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களை தடுக்க வாய்ப்பிருப்பதாக மனுதாரர் அச்சம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய மத வழிபாடு செய்துகொள்ள உரிமை உண்டு. அதை, யாரும் தடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால், பக்தர்களுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Manusmriti veda epic burning protest not allowed in srirangam govt informs in hc