"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எத்தனையோ சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் விஷால்”, என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக தாமதமாக வேட்பாளரை அறிவித்தது என்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “பாஜகவுக்கு இடைத்தேர்தல் என்பது புதியது அல்ல. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக தாமதமாக வேட்பாளரை அறிவித்ததாக தவறான தோற்றம் இருக்கிறது. 5 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கும் மத்திய தலைமை ஒரே நாளில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இது நிர்வாக ரீதியான நடைமுறையே தவிர தாமதிக்கவில்லை.”, என கூறினார்.
இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட யாரும் கிடைக்கவில்லை என்ற விமர்சனத்துக்கு பதில் தெரிவித்த தமிழிசை, “15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் துணிச்சலுடன் நிற்க தயாராக இருந்தார்கள். ஊழலற்ற கட்சி என்றால் பாஜகதான். நாங்கள் தேர்தலில் தனித்துவிடப்படவில்லை. தனித்தன்மையுடன் போட்டியிடுகிறோம். பலம் பொருந்திய வேட்பாளராக கரு.நாகராஜனை களம் இறக்கியிருக்கிறோம்”, என கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எத்தனையோ சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் எனவும், அவர்களில் ஒருவர்தான் விஷால் எனவும், தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.