சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைதேர்தல் நடத்தப்படும் தேதியை டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியா தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடகோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு சட்டமன்ற தொகுதி காலியாக இருந்தால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இது நாள் வரை இந்த தொகுதியில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை. தேர்தலை நடத்தகோரி கடந்த ஜூலை 3 ஆம் தேதி மனு அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதீபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதரார் சம்மந்தப்பட்ட தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர் எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.
அப்போது நீதிபதிகள், ஆர்.கே.நகருக்கு ஜூன் 4-ம் தேதியுடன் தேர்தல் நடத்துவதற்கான காலம் முடவடைந்த நிலையில், கடந்த 3 மாதம் அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என எவ்வளவு நாட்களுக்கு தெரிவிப்பிர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகும் என இந்த நீதிமன்றம் நம்புவதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இடைத்தேர்தல் நடத்துவதை காலம் தாழ்த்த வேண்டாம் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.