scorecardresearch

கவர்மெண்ட் சாராயம் vs கள்ளச் சாராயம்: ரூ10 லட்சம் நிவாரணம் அறிவிப்பால் தெறிக்கும் மீம்ஸ்

கள்ளச்சாராய மரணங்களுக்கு மட்டும் ஏன் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

Chennai
Marakkanam Spurious liquor death

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஐ தொட்டது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் மெத்தனத்தாலும், போலீஸாரின் அலட்சியத்தாலும் இந்த உயிரிழப்பு நடந்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போலீஸார் நடத்திய சோதனையில் இதுவரை 1558 சாராய வியாபாரிகளை கைது செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் பலர், சாலை விபத்து மரணங்கள், பட்டாசு விபத்து மரணங்கள், நீரில் மூழ்கி மரணங்கள் போன்றவற்றுக்கு அரசு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைதான் இழப்பீடு வழங்கி வருகிறது.

ஆனால், கள்ளச்சாராய மரணங்களுக்கு மட்டும் ஏன் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு சிலர் கள்ளச் சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்களில் கள்ளச்சாராயம் குடித்து செத்தால் வீட்டுக்கு ரூ.10 லட்சம் நிதி கிடைக்கும், நல்ல சாராயம் குடிப்பதற்கு இனி கள்ளச்சாராயம் குடித்தால் நம்ம வீடாவது நன்றாக இருக்கும் என்றவாறெல்லாம் மீம்ஸ்கள் தெறிக்கின்றன.

இதனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் என்பது மேலும் பலரை இந்தப் பழக்கத்திற்குத் துாண்டி விட வாய்ப்பாக அமைந்துள்ளது.

கள்ளச்சாரயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என்ற நட்பாசையால் வறியோர், அன்றாட வருவாய்க்கே அல்லல்படுவோர் பலரும் கள்ளச்சாராயம் எங்கே கிடைக்கும் எனத்தேடி ஓடும் அவலம் ஏற்படலாம் எனவும் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், எந்த வகையான பாதிப்புகளுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக விதிகள் ஏதாவது உள்ளதா என்பதை கண்டறிய முதல்வரின் பொது நிவாரண நிதி இணையதளத்தை (https://cmprf.tn.gov.in/tncmprf/) பார்வையிட்டதில், அந்த இணையதளத்தில், 13.07.1971 அன்று முதல்வரின் பொது நிவாரண நிதி உருவாக்கப்பட்டதற்கான அரசாணை, நிவாரணம் தொடர்பான முதல்வரின் அறிவிப்புகள், 2021 முதல் நிதி வழங்கியவர்களின் பட்டியல் மற்றும் நிவாரணம் பெற்றவர்களின் பட்டியல் ஆகிய தகவல்கள் தான் இருந்தன.

ஆனால் எதற்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பது தொடர்பான விதிகள் இந்த இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Marakkanam spurious liquor death mk stalin meme

Best of Express