இந்து (35) , சந்தியா (45) மற்றும் ஜெயந்தி ( 21 ) என்ற மூன்று யானைகளையும் மரக்காணத்தில் இருந்து திருச்சி யானைகள் மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்திற்கு இடம் மாற்றம் செய்யும் போது சித்தரவதை செய்யப் பட்டதாக வந்த தகவல் அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது.
காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த இந்த மூன்று யானைகளை மருத்துவ வசதிக்காக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வன அதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்கி மரக்காணத்தில் உள்ள தனியார் தனியார் யானைகள் சரணலயத்திடம் (TREE Foundation ) 2016- ல் ஒப்படைக்கப் பட்டது. இந்த ஒப்புதல் முதலில் மூன்று மாதங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிரிந்தாலும், காஞ்சி மடத்தின் கோரிக்கையை ஏற்று பலமுறை கால அவகாசம் புதிப்பிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மூன்றாம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் காஞ்சி மடத்திடம் யானையைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பை அளித்தது. மேலும், கடந்த செப்டம்பர் 19 ம் தேதி, வனத்துறை இன்னும் நான்கு வாரத்திற்குள் தனியார் யானைக் காப்பகத்தில் இருந்து மீது தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திருச்சி யானைகள் மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என்ற ஆணையும் பிறப்பித்தது.
இந்த, ஆணையை அமல்படுத்துவதற்காக மிகவும் அவசர அவசாரமாக மரக்காணத்தில் இருந்த மூன்று யானைகளையும் நேற்று வனவிலங்கு அதிகாரிகள் லாரிகளில் ஏற்றினர்.
மிகப்பெரிய கம்பி மற்றும் இரும்பு கொக்கிகளால் யானைகளுக்கு கடுமையான உடல் சோர்வையும் , மனச் சோர்வையும் எற்படுத்தியும் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. முறையாகத் திட்டமிட்டு, வல்லுனர்களை கலந்து ஆலோசித்திருந்தால் யானைகளுக்கு ஏற்ப்பட்ட மனச் சோர்வையும், உடல் சோர்வையும் தவிர்த்திருக்கலாம் என்று நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர்.