யூடியூபர் மாரிதாஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மாநில அரசுக்கு எதிராகவும் முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விவகாரத்தைப் பற்றி கருத்து தெரிவித்து பதிவிட்டிருந்ததாக தி.மு.க-வைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாரிதாஸ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மாரிஸ்தாஸ் மீது வழக்குப் பதிவு செய்தது செல்லாது என்றும் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, ஜனவரி 2-ம் தேதி மாரிதாஸ் பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று (ஜனவரி 9) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்ஜய் ஹெக்டே, மாரிதாஸ் தரப்பில் எவ்வித பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம் யூடியூபர் மாரிதாஸ்-க்கு எதிரான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தது. மேலும், யூடியூபர் நிகாரிகா வழக்கில் அளித்த தீர்ப்புக்கு முரணாக உள்ளது என்றும் யூடியூபர் மாரிதாஸ்-க்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிய அவகாசம் தேவை என்றும் கருத்து தெரிவித்தது. மேலும், மேலும், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் அதனால், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"