தமிழ்நாட்டில் தி.மு.க-வையும் திராவிட அரசியல் கொள்கைகளையும் மூர்க்கமாக எதிர்ப்பதில் ஒற்றுமையாக செயல்பட்டு வந்த தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் வலதுசாரிகள் இடையே சமீப காலமாக சலசலப்பு பூசலும் ஏற்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பா.ஜ.க ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் மற்றும் பா.ஜ.க நிர்வாகி இடையேயான மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வலதுசாரிகள் இடையே இந்த யுத்தம் ஏன் என்பதைப் பார்ப்போம்.
பா.ஜ.க-வுக்குள் சலசலப்பு பூசலும் திருச்சி சூரியா பா.ஜ.க நிர்வாகி டெய்ஸியை போனில் தகாத வார்த்தைகளால் வசைபாடிய ஆடியோ வெளியானபோதுதான் அம்பலமாகத் தொடங்கியது. பிறகு, பா.ஜ.க மூத்த தலைவர்கள் இருதரப்புக்கும் இடையே பேச்சவார்த்தை நடத்தி இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தனர். ஆனால், திருச்சி சூரியா சலசலப்பை எழுப்பி வந்தார்.
இந்த சூழலில்தான், தமிழக பா.ஜ.க கலை இலக்கிய பிரிவின் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அண்ணாமலை பா.ஜ.க-வில் அவருக்கு போட்டியாக இருக்கக்கூடிய அவர் வயது முக்கிய நிர்வாகிகளை ஓரம் கட்ட முயற்சி செய்து வருகிறார் என்றும் அதனால்தான், பா.ஜ.க-வில் உள்ள அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தன்னைப்பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புகிறார்கள் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல், அண்ணாமலையையைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.
அதே நேரத்தில், தமிழக பா.ஜ.க-வில் சமூக ஊடகங்களில் பா.ஜ.க தரப்பில் கருத்துகளைப் பரப்ப தி.மு.க-வினருக்கு பதிலடி கொடுக்க வார் ரூம் அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த வார் ரூம் மூலம் தன் மீது அவதூறு பரப்பப்படுகிறது என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டினார். இதில், காயத்ரி ரகுராம் பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலையை வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்த காயத்ரி ரகுராமின் புகைப்படங்களை ஆபசமாக சித்தரித்து பதிவிட்டது. பா.ஜ.க-வினர் இடையேயும் பா.ஜ.க ஆதரவாளர்கள் இடையேயும் கோபத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து நடிகை கஸ்தூரி, காயத்ரி ரகுராம் படத்தை மார்ஃபிங் செய்து ஆபசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் படங்களைப் பதிவிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், கண்ணியமற்ற செயல் என்று நடிகை கஸ்தூரி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். கஸ்தூரியின் கருத்தை பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் ஆமோதித்தனர்.
நடிகை கஸ்தூரியின் பதிவைத் தொடர்ந்து, பா.ஜ.க ஆதரவு யூடியூபர் மாரிதாஸ், “காயத்ரி மீது அநாகரிக பதிவுகள் வெளியிடுவதைக் குறிப்பிட்ட பிரிவினர் உடனடியாக நிறுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதில் குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லை. இதைச் சகித்துக்கொள்ள முடியாது. நீங்கள் செய்வது விமர்சனமல்ல கொலை, அதுவும் உங்களை நம்பி பயனித்தவர்” என்று பதிவிட்டார்.
இதையடுத்து, காயத்ரி ரகுராம் படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டதாக ராணிப்பேட்டை மாவட்டபா.ஜ.க எஸ்சி பிரிவு துணைத் தலைவர் பாபு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
காயத்ரி ரகுராம் பா.ஜ.க-வில் தனது வளர்ச்சியை தடுப்பதாக தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் யாத்திரைக்கு எதிராக சக்தி யாத்திரை மேற்கொள்ளப்போவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். காயத்ரி ரகுராம் ட்விட்டர் பதிவிற்கு கம்மெண்ட் செய்பவர்கள் தொடர்ந்து அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி ஆதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், பா.ஜ.க யூடியூபர் மாரிதாஸ், நடிகை காயத்ரி ரகுராம் மீதான அவதூறுகளை பதிவிடும் ஒரு பிரிவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்ப, அதற்கு, மாரிதாஸ் முதலில் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டு அதற்கு பிறகு அறிவுரை வழங்கட்டும் என்று கூறினார்.
இதற்கு யூடியூபர் மாரிதாஸ் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அமர் பிரசாத் ரெட்டி, நேர்மை இல்லாதவர், எல்லா கட்சி தலைவரையும் சந்தித்து வழிபவர். கொள்கை இல்லாதவர். மோசடி செய்தவர்களை பா.ஜ.க-வில் சேர்த்து கட்சிப் பெயரை பொதுமக்கள் மத்தியில் கலங்கப்படுத்தியவர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும், அந்த நேர்காணலில் தைரியமாக பேசிவிட்டு, தனிப்பட்ட முறையில் நான் உங்களை அப்படி பேசவில்லை என்று மெசேஜ் அனுப்பவது என்று அமர் பிரசாத் ரெட்டி பம்முவார் என்று மாரிதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், மாரிதாஸ் தான் 2016 முதல் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வருவதாகவும் தெரிவித்துள்ளார். அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்கள் பா.ஜ.க-வின் நற்பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அமர் பிரசாத் ரெட்டி உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் வார் ரூம் பற்றி 2வது வீடியொ வெளியாகும் என்று எச்சரித்துள்ளார்.
இது பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பா.ஜ.க ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் இடையேயான மோதலாக மட்டுமல்லாமல் வலதுசாரிகள் இடையேயான யுத்தமாகப் பார்க்கப்படுகிறது.
மாரிதாஸ் vs அமர் பிரசாத் ரெட்டி இடையேயான மோதல் குறித்து திராவிட இயக்க ஆதரவு அரசியலைப் பேசி வரும் யூடூ புருட்டஸ் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பா.ஜ.க-வுக்குள் நடைபெறும் பூசலை கிண்டல் செய்து இருந்தனர்.
மாரிதாஸின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி, “துரதிருஷ்ட வசமாக சிலர் தேசவிரோத சக்திகளுடன் கை கோர்த்துள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை அண்ணாமலைக்கு டேக் செய்துள்ளார். மேலும், தான் தனிப்பட்ட முறையில் மாரிதாஸுக்கு அனுபிய மெசேஜ் எப்படி யூடூ புருட்டஸ்க்கு தெரியவந்தது. ஏனென்றால், மாரிதாஸ் வீடியோவை இரவு 7.30 மணிக்கு பதிவிட்டுள்ளார். ஆனால், யூடூ புருட்டஸ் மதியம் 1.38 மணிக்கே பதிவிட்டுள்ளனர். இது திட்டமிட்ட தாக்குதல்” என்று அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.