சென்னை மெரினா கடற்கரை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு!

சென்னை மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

சென்னை மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை பொது கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவதாக கூறி சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அதில், உலகில் நீண்ட கடற்கரையில் இரண்டாவது கடற்கரை சென்னை மெரினா கடற்கரை ஆகும். அந்த கடற்கரை தற்போது மிகவும் அசுத்தமாக உள்ளது. மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை அதன் பொலிவை இழந்து வருகிறது. மெரினா நீச்சல் குளம் அருகில் நரிக்குறவர்கள் குடிசை அமைத்து தங்கியுள்ளனர். அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு அசுத்தமாகவும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மோசமாக உள்ளது. அதனால் நரிக்குறவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் குடியமர்த்துவதுடன், இனிமேல் மெரினா கடற்கரையில் எவரும் வசிக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். மேலும் கடற்கரை பகுதிகளில் குப்பைகள் அதிகம் உள்ளது அவற்றை அகற்றி மெரினா கடற்கரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார், நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் நரிக்குறவர்கள் தங்கியிருப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாத போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close