/indian-express-tamil/media/media_files/2025/05/24/syK0NkPE00rLRdVgmFWd.jpg)
மெரினா கடற்கரையில் 300 ஏ.ஐ. கேமராக்கள்: உயர் பாதுகாப்பு மண்டலமாக மாற்றும் சென்னை காவல்துறை!
பெருநகர சென்னை காவல்துறையினர், மெரினா கடற்கரை நெடுகிலும் சுமார் 300 செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவத் தயாராகி வருகின்றனர். நகரத்தின் மிகவும் பரபரப்பான பொது இடங்களில் ஒன்றான மெரினாவை, நிகழ்நேர கூட்டம் கண்காணிப்பு (Crowd Tracking), முக அங்கீகாரம் (Facial Recognition), குற்றத் தடுப்பு மற்றும் வாகன எண்ணைக் கண்டறிதலுக்காக உழைப்பாளர் சிலை முதல் சீனிவாசபுரம் வரை 5 மண்டலங்களாக 71 முக்கிய இடங்களில் சுமார் 300 கேமராக்கள் (ஏ.ஐ. திறன் கொண்டவை) பொருத்தப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கண்ணகி சிலை, கலங்கரை விளக்கம், நேப்பியர் பாலம், சாந்தோம் தேவாலயம் மற்றும் காமராஜர் சாலைக்கு அருகிலுள்ள பகுதிகள் அடங்கும்.
காவல்துறை வெளியிட்டுள்ள திட்ட முன்மொழிவு (RfP) அறிக்கையின்படி, இந்த அமைப்பில் 280 நிலையான 8MP 4K அல்ட்ரா ஹெச்டி புல்லட் கேமராக்கள், 20 சுழலும் திறன் கொண்ட PTZ கேமராக்கள் (முக அடையாளம் மற்றும் வாகன எண் கண்டறியும் திறன் கொண்டவை). இந்தக் கேமராக்கள் அனைத்தும் துருப்பிடிக்காத தூண்களில் பொருத்தப்படும். இவை தடையின்றி இயங்க, ஒவ்வொரு தூணிலும் வானிலை தடுப்புக் கூடாரங்கள், நெட்வொர்க் சுவிட்சுகள் மற்றும் யுபிஎஸ் (UPS) மின்கல ஆதரவு ஆகியவை இடம்பெறும் என்று டைம் ஆஃப் இந்தியா நாளிதழிடம் பேசிய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் இதற்கென சிறிய கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். இது வீடியோ பதிவுகளைத் திரட்டி, பின்னர் வேப்பேரியில் உள்ள நுண்ணறிவு நகரக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு (ICCC) நிகழ்நேரத்தில் அனுப்பும். ஆர்.எஃப் ரேடியோ இணைப்புகள், ஆப்டிகல் ஃபைபர் மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட இணைப்புகள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தித் தடையற்ற தரவு பரிமாற்றம் உறுதி செய்யப்படும்.
இந்த ஏ.ஐ. இயங்குதளம், கூட்டம் அதிகரிப்பது, சந்தேகத்திற்கிடமான நடமாட்டம், பாதுகாப்பு மீறல்கள் ஆகியவற்றின் மீது தானியங்கி எச்சரிக்கைகளை வழங்கும். வீடியோ காட்சிகள் 30 நாட்களுக்கு உள்ளூர் அளவிலும், மத்தியளவில் காப்பகப்படுத்தப்பட்டும் வைக்கப்படும். தரவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஃபயர்வால்கள், விபிஎன் குறியாக்கம் மற்றும் ஊடுருவல் தடுப்பு அமைப்புகள் மூலம் இந்த நெட்வொர்க் பாதுகாக்கப்படும்.
மெரினா கடற்கரையின் இந்தக் கண்காணிப்பு வலையமைப்பை, நகரத்தின் முக்கியப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள ICCC அமைப்புடன் ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு கூறுகையில், "வெளி நபர்கள் சிலர் கடற்கரைப் பகுதியைப் போதைப்பொருள் பயன்படுத்தப் பயன்படுத்துகின்றனர். இந்த கேமராக்கள் குறிப்பாக கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும்" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.