மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை காவல்துறை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கொடுப்பதில்லை என்கிற நிலைப்பாடை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. குறிப்பாக ஜல்லிகட்டு போராட்டத்திற்காக லட்சக்கணக்கில் மெரினாவில் இளைஞர்கள் குவிந்த பிறகு இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தும் விவகாரத்திலும் மெரினாவில் போராட்டத்தை தொடங்க பல்வேறு அமைப்பினரும் முயற்சித்து வருகிறார்கள்.
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்க அவர் கோரிக்கை வைத்தார்.
இந்த மனுவுக்கு சென்னை காவல் ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது. போராட்டங்கள் நடத்த ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அய்யாகண்ணுவுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா முன் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.