காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு என்ன என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டிய ஏராளமான தொண்டர்கள் கோவில்களிலும் மற்ற இடங்களிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர். இவ்வளவு ஏன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இந்த நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கருணாநிதி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுக்குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பது, “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக மக்கள் பரிதாப்படுகிறார்கள். ஆனால், கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்னர், அவரது சொத்து மதிப்பு என்ன? இப்போது கருணாநிதி, அவரது மனைவிகள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் ஆகியோரது சொத்து மதிப்பு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்கள் முதல்வராக இருந்த காமராஜர் உயிரிழந்த போது அவரிடம் எதுவுமே இல்லை. ஆனால், தற்போது அது தலைகீழாக உள்ளது ” என்று கூறியுள்ளார்.
பெரும் சர்ச்சயை ஏற்படுத்திய இந்த பதிவுக்கு திமுக-வின் சமூக வலைத்தளப் பிரிவு பதிலளித்துள்ளது.மொத்தம் 7 ட்வீட்களில் மார்கண்டேய கட்ஜுவின் பதிவுக்கு திமுகவினர் ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளனர்.
”கட்ஜு நீங்கள் சங் பரிவார் ஆட்களை போல் வடிக்கட்டிய பொய் சொல்லும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். கருணாநிதி 18 வயதானபோது, முரசொலியை வார இதழாக தொடங்கினார். அது மட்டுமில்லாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை மற்றும் ரைசிங் சன் (ஆங்கில இதழ்) ஆகியவையும் அவரால் தொடங்கபட்டது.
அதே 18 வயதில் கருணாநிதி நாடகங்களும் எழுதத் தொடங்கியிருந்தார். திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கக் கூட்டங்களிலும் பங்குபெற்று வந்தார். அவர் 1949-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த 2 ஆண்டுகளில் மாடர்ன் தியேட்டர்ஸில் கதாசிரியராக மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைந்தார்.
READ: Mr.@mkatju You seem to be suffering from a disease of the Sanghis that is lying through nose. Thalaivar #Kalaignar had started Murasoli as a weekly when he was 18.(addition to Murasoli, Kungumam, Muththaram, Vannathirai &Rising Sun in English were founded by MK)
THREAD 1/n https://t.co/NUhbSugonU
— #DMK4TN (@DMK4TN) 31 July 2018
அதே வருடத்தில் செப்டம்பர் 17-ம் தேதி கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் நடந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தொடக்க விழாவில் பங்குபெற்றார்.உங்களுடைய சினிமா ரசனையை வைத்து பார்க்கும்போது, உங்களுக்கு(கட்ஜு) தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் ‘மணமகள்’ படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக என்.எஸ்.கே-வால் கருணாநிதிக்கு 10,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.கருணாநிதி தற்போது குடியிருக்கும் வீடு 45,000 ரூபாய்க்கு அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பே வாங்கப்பட்டது. அது அவருடைய இறப்பிற்குப் பின் மருத்துவமனையாக மாற உள்ளது.
ருணாநிதி முதன்முதலாக 1957-ல் தேர்தலில் நின்றார். ஆனால் அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டுவிட்டது. மேலும், அந்த சமயத்திலேயே கருணாநிதியிடம் கார் இருந்தது. அவர் அப்போது சிவாஜி கணேசனை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.
உங்களுடைய மனம் அறியாமையால் சூழப்பட்டிருப்பதால். உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள இந்தப் பத்திரிக்கை செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்: என்று கூறி அதன் விவரத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.